Tuesday, August 23, 2011

வௌவால் எப்படி இரவில் பறக்கிறது?

டொனால்டு ஆர்.கிரிப்பின், ராபர்ட் கேலம்போஸ் என்ற இரு விலங்கியல் ஆய்வாளர்களுக்கு நீண்ட நாட்களாய் ஒரு சந்தேகம் இருந்து வந்தது. “கும்மிருட்டில் கூட எப்படி வௌவால்கள் எதிலும் மோதிக்கொள்ளாமல் பறக்கின்றன?” என்பதுதான் அவர்களின் சந்தேகம்.

இதனை எப்படி அறிந்து கொள்வதென்று பல்வேறு யோசனைகள் செய்து இறுதியாய் ஒரு குறிப்பிட்ட முறையில் ஆய்வை செய்து பார்ப்பதென முடிவு செய்தனர். ஓர் இருட்டறையில் குறுக்கும் நெடுக்குமாக மிகவும் மெல்லிய கம்பிகளைக் கட்டிவிட்டனர். பிறகு சில வௌவால்களை பிடித்து அந்த அறையிலே பறக்க விட்டனர். அவை கம்பிகளின் மேல் மோதாமல் பறந்தன.

ஆச்சரியமடைந்த விஞ்ஞானிகள் வௌவால்கள் எப்படி கம்பிகளின் மேல் மோதாமல் பறக்கின்றன என்று குழம்பிப் போயினர். பின்னர் அந்த வௌவால்களை பிடித்து அவற்றின் கண்களை மூடிவைத்து பறக்கவிட்டனர். இப்போதும் அவை கம்பிகளின் மேல் மோதாமல் பறந்தன.

வியப்பின் எல்லைக்கே போன அந்த ஆராய்ச்சியாளர்கள், வௌவால்கள் கண்களின் உதவியால் பறக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டனர். அதன்பின்னர் வௌவால்களின் வாய்களைக் கட்டிப் பறக்கவிட்டனர். அப்போது அவை கம்பிகளின் மேல் மோதிக் கொண்டன.

அடுத்ததாய் அவற்றின் செவிகளை அடைத்து பறக்க விட்டபோதும் அவை கம்பிகளில் மோதிக் கொண்டன. அப்போதுதான் வௌவால்கள் தாம் வெளியிடும் ஒலியின் எதிரொலியைக் கேட்டவாறே அதற்கேற்றாற்போல் பறக்கின்றன என்பதைக் கண்டுபிடித்தனர்.

Friday, August 19, 2011

வெற்றிக்கு ஒரு புத்தகம் - சந்தோஷ வழி...

வெற்றியைத் தேட ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. சந்தோஷத்தை எங்கே போய்த் தேடுவது? அது உள்ளுக்குள்ளிருந்து மலரவேண்டிய விஷயம் இல்லையா? நாமாக நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வழி(கள்) ஏதேனும் உண்டா?
இந்த கேள்விகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பிரபலமான புத்தகம் "The way to happiness " இங்கிலாந்தைச் சேர்ந்த ரான் ஹப்பார்ட் என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் இன்றுவரை பல லட்சம் பிரதிகள் வெளியாகியுள்ளது. 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
"The way to happiness ' புத்தகத்தின் ஸ்பெஷாலிட்டி, இதில் விரிவாக்கப்பட்டுள்ள 21 வழிமுறைகள். "இவற்றை உணர்ந்து பின்பற்றத் தொடங்குவதுதான் உண்மையான சந்தோஷத்துக்கான அடித்தளம்' என்று ஆசிரியர் ரான் ஹப்பார்ட் அடித்துச் சொல்கிறார்.
"சந்தோஷத்தின் வழி'யாக அவர் முன்வைக்கும் அந்த எளிய சூத்திரங்கள், இங்கே சுருக்கமாக:

1. முதலில், உடம்பைப் பார்த்துக்கோங்க, சுவர் இருந்தால்தான் சித்திரம்.

2. உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள், பின்விளைவுகளை யோசித்து மனசைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள்.

3. உங்களுடைய உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, பிஸினஸ் கூட்டாளிகளுக்கு விசுவாசமாக இருங்கள்.

4. உங்கள் வயசு எதுவானாலும் பரவாயில்லை, குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்.

5. பெற்றோரை மதியுங்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள்.

6. "அடுத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல முன் உதாரணமாகத் திகழ்வேன்' என்று உங்களுக்கு நீங்களே உறுதி சொல்லிக் கொள்ளுங்கள்.

7. உண்மை எத்தனை கசப்பானாலும் பரவாயில்லை, ஏற்றுக்கொள்ளுங்கள்.

8. யாரையும் கொல்லாதீர்கள், வார்த்தைகளால்கூட!

9. சட்டவிரோதமான எதையும் செய்யாதீர்கள், அதனால் எத்தனை லாபம் வந்தாலும் சரி!

10. பாரபட்சமின்றி சமூகத்தில் ஒரு சமநிலை வருவதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பியுங்கள்.

11. ஒருவர் நல்லது செய்யும் போது, ஏதாவது சொல்லி அவரது முயற்சியைக் கெடுத்துவிடாதீர்கள்.

12. உங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உங்களுடைய பொறுப்பு.

13. திருடாதீர்கள்.

14. எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக இருங்கள்.

15. சொன்ன வாக்கை மீறாதீர்கள்.

16. "சும்மா இருப்பதே சுகம்' என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.

17. கல்வி என்பது முடிவற்றது, எந்நேரமும் மாணவராகவே வாழவேண்டும்!

18. அடுத்தவர்களுடைய மத உணர்வுகளை மதியுங்கள், கேலி செய்யாதீர்கள்.

19. மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்குச் செய்யாதீர்கள்.

20. அதேபோல், அவர்கள் உங்களை எப்படி நடத்தவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியே நீங்ள் அவர்களை நடத்துங்கள்.

21. இந்த உலகம் வளங்களால் நிறைந்தது, அள்ளி எடுத்துக்கொண்டு முன்னேறுங்கள்.


- என் சொக்கன்

Friday, August 12, 2011

Win மொழி!!!

"குருவே, எனக்கு பிரச்னைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது' என்று சொன்னவனைப் பார்த்தார் குரு.
"என்ன சங்கதி' என்றார்.
"என் வாழ்க்கையில் எங்கு பார்த்தாலும் பிரச்னைகள்தான் தெரிகிறது. அவற்றை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை' என்றான் வந்தவன்.
இதைக் கேட்டதும் குருவுக்கு அவனுடைய பிரச்னை புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார்.

"ஒரு பஸ் கண்டக்டர் இருந்தார். தினமும் அவருக்கு ஒரே ரூட்தான். ஒரு நாள் வழக்கமான பாதையில் பஸ் பயணித்துக் கொண்டிருந்தது. நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. ஒர நிறுத்தத்தில் முரட்டுத்தனமான மனிதன் ஒருவன் ஏறினான். பெரிய மீசையும் தடித்த உருவமுமாய் இருந்தவனைப் பார்த்த எல்லோருக்குமே கொஞ்ச அச்சமாய்தான் இருந்தது.
கண்டக்டர் அவனிடம் சென்று, "டிக்கெட்' என்று கேட்டார். அவன் உடனே, "எனக்கு டிக்கெட் வேண்டாம்' என்று சொல்லி சட்டென்று முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக் கொண்டான். "ஏன் டிக்கெட் வேண்டாம்' என்று கேட்க கண்டக்டருக்குப் பயம். தள்ளி வந்துவிட்டார்.
மறுநாளும் இதே கதை. "எனக்கு டிக்கெட் வேண்டாம்' என்று முறைத்தக் கொண்டோ சொல்லக் கண்டக்டர் வந்துவிட்டார். இப்படியே ஒரு வாரம் கழிந்தது. கண்டக்டருக்கு எரிச்சல் அதிகரித்தக் கொண்டே இருந்தது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணினார்.
அவன் பலசாலியாக இருப்பதால்தானே பயமாக இருக்கிறது, நாமும் பலசாலியாவோம் என்று எண்ணி உடற்பயிற்சிகள் செய்யத் துவங்கினார். தற்காப்பு கலை வகுப்புகளுக்குப் போனார். ஆறு மாதங்கள் இப்படியே போனது. கண்டக்டரின் உடல் வலுவானது. பயம் கொஞ்சம் போனது. இன்று அந்த தடியனிடம் டிக்கெட் ஏன் எடுப்பதில்லை என்று கேட்டுவிட வேண்டும் என்று பஸ்ஸில் ஏறினார்.
இரண்டு ஸ்டாப்புகள் கழித்து அவன் ஏறினான். கண்டக்டர் டிக்கெட் கேட்க அவன் வழக்கம்போல், "நான் டிக்கெட் எடுக்கத் தேவையில்லை' என்று சொல்லி தலையைத் திருப்பிக் கொண்டான். கண்டக்டர் தன் தைரியத்தையெல்லாம் வரவழைத்துக் கொண்டு "ஏன் தேவையில்லை?' என்று விறைப்பாய் கேட்டார். அதற்கு அவன் சொன்ன பதில், "நான் பஸ் பாஸ் வைத்திருக்கிறேன்'.'
இந்தக் கதையைச் சொன்னதும் வந்தவனுக்கு எல்லாவற்றையும் பார்த்து மிரளும் தன்னுடைய குணம் புரிந்தது.

அப்போது குரு அவனுக்கு சொன்ன Win மொழி:

பிரச்னைகளை ஆராயாமல் பயப்படக் கூடாது!

- ரஞ்சன்,குமுதம்.

Monday, August 1, 2011

இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.!!!


சென்னை பழவந்தாங்கல் என்ஜிஒ காலனியில் உள்ள அந்த வீட்டைப் பார்ப்பவர்கள் யாரும் அது ஒரு எம்.எல்.ஏ.வின் வீடு என்றால் நம்பமாட்டார்கள். ஒரு மொட்டை மாடியில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட வீடு அது.அந்த வீட்டில்தான் மதுரவாயல் தொகுதியில் வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க.பீம்ராவ் வசிக்கிறார்.

வீட்டிலும் அத்தியாவசியப் பொருள்களைத் தவிர ஆடம்பரப் பொருள்கள் எதுவும் இல்லை. விலை உயர்ந்த பொருள்களாக இரண்டைக் குறிப்பிடலாம்.ஒன்று ஒரு பித்தளை தவலை. இரண்டாவது திமுக அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட இலவசக் கலர் டிவி. (அந்த டிவியும் பீம்ராவ் மனைவி பிடிவாதமாக வாங்கி வைத்ததாம்.)

இந்த எளிமையான வீட்டில் இருந்துதான் க.பீம்ராவ் கட்சி ரீதியாக சிறப்பாகப் பணியாற்றி வந்துள்ளதுடன், இப்போது தேர்தலிலும் சாதனை படைத்துள்ளார்.தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியில் தாழ்த்தப்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதே தமிழகத்தில் பெரும் போராட்டம். பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்து வார்டுகள் இதற்குச் சரியான உதாரணம்.

இந்நிலையில்தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரான க.பீம்ராவ் பொது தொகுதியான மதுரவாயலில் நின்று வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கே.செல்வத்தைவிட பீம்ராவ் கூடுதலாக 24,011 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த வெற்றி மூலம் இரண்டு சந்தோஷங்கள் கிடைத்திருப்பதாக க.பீம்ராம் கூறுகிறார்.

ஒன்று: "இன்னும் கூடுதலாக மக்கள் பணியாற்ற ஒரு பதவி கிடைத்திருக்கிறது. ஆனால்

இதைப் பதவி என்று நாங்கள் சொல்ல மாட்டோம். பொறுப்பு என்றுதான் சொல்வோம். இதன் மூலம் மக்களோடு இன்னும் நெருங்கிப் போகக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.'

இரண்டு: "புது பேன்ட் சட்டைகள் கிடைக்கின்றன. எம்.எல்.ஏ. ஆகிவிட்டதால் அழுக்கு சட்டையோடு எங்கும் போகக்கூடாது என்று தோழர்கள் நினைக்கிறார்கள். ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கு பத்து பேன்ட் சட்டைகள் எடுத்துக் கொடுத்தார்கள். இதைப்போல பல தோழர்கள் புது பேன்ட் சட்டைகள் எடுத்து வருகிறார்கள். இது ஒரு பெரிய சந்தோஷம்' என்கிறார்.

புது பேன்ட் சட்டை கொடுக்கும்போது க.பீம்ராவ் கண்டிப்பாகத் தையல் கூலியையும் கேட்டு வாங்கிக் கொள்கிறார்.

இந்த முறையைச் சிலர் தவறாக நினைக்கக்கூடும். ஆனால் கட்சி ரீதியான அவர் நடைமுறை வாழ்க்கையைப் புரிந்தவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள்.

1983-ம் ஆண்டு வாலிபர் சங்கம் மூலம் பீம்ராவ் அரசியல் பணிக்கு வந்து, பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு பிரச்னைகளுக்காகப் போராட்டம் நடத்திச் சிறை சென்றவர்.

இப்போது தென்சென்னை மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். முழு நேர கட்சி ஊழியர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியால் அளிக்கப்படும் மாதாந்திரப் படியான 3 ஆயிரம் ரூபாயே அவரின் வருமானம்.

முழு நேர கட்சி நிர்வாகிகளாக இருப்பவர்கள் வேறு பணிகளிலும் இருக்கக்கூடாது. இந்தப் பணத்தைக் கொண்டே குடும்பத்தை நடத்த வேண்டிய சூழல். 2 மகன்கள்; ஒரு மகள் என இவருக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகன் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். மற்றவர்கள் பள்ளி வகுப்புகளில் படித்து வருகிறார்கள். இவர்களின் கல்விச் செலவுகளை எல்லாம் உறவினர்களே கவனித்துக் கொள்கிறார்கள்.

எம்.எல்.ஏ.சம்பளம்: எம்.எல்.ஏ.க்களுக்குப் படிகளுடன் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம். இந்தச் சம்பளத்தால் பீம்ராவ் குடும்பம் வசதி பெறும் என்று நினைத்தால் அதுவும் தவறானதாகும். இந்தச் சம்பளம் அனைத்தும் கட்சிக்குச் சென்று அவருக்குக் கிடைக்கப்போவது வெறும் 5 ஆயிரத்து 600 ரூபாயே.

"சம்பளம் முழுவதும் கட்சிக்கே போய்விடுவதால் வருத்தமா?' என்றால் "சம்பளம் என்பது பொருட்டல்ல. எனக்கு மக்களுக்குப் பணியாற்றுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை எப்படிச் சிறப்பாகச் செய்யலாம் என்பதுதான் கவலையாக இருக்கிறது. விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரைக் காப்பாற்றுவதற்குப் போராடும் ஒரு மருத்துவரைப் போல நான் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும்' என்று நினைக்கிறேன் என்றார்.

"பொது தொகுதியில் தாழ்த்தப்பட்டவர் வெற்றிபெற்று இருப்பதன் மூலம் தமிழகத்தில் ஜாதி கண்ணோட்டம் குறைந்து போய்விட்டது என எடுத்துக் கொள்ளலாமா?' என்று கேட்டால், "தமிழகம் முழுவதும் குறைந்து போய்விட்டது என்று எடுத்துக் கொள்ள முடியாது. நான் வெற்றிபெற்றது நகர்ப்புறத்தைச் சார்ந்த பகுதி. இங்கு ஜாதி எண்ணம் குறைந்திருக்கலாம்.

ஆனால் ஜாதி உணர்வாளர்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. எந்தச் ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சிறப்பான மக்கள் தொண்டு செய்பவர்களாக இருந்தால் அவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்கிற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பது மட்டும் தெளிவாகிறது.

ஜாதியற்ற சமுதாயத்தைக் காணவேண்டும் என்பதே எங்கள் கட்சியின் கொள்கை. அதில் வெற்றிபெறலாம் என்கிற நம்பிக்கையை என் வெற்றி ஏற்படுத்தி இருக்கிறது' என்கிறார் க.பீம்ராவ் எம்.எல்.ஏ.

- Dina Mani...