Saturday, February 18, 2012

இந்திய ஐ.டி. துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

சர்வதேச பொருளாதார மந்தநிலையிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இந்திய ஐ.டி. நிறுவனங்கள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன. நடப்பு நிதி ஆண்டில் இத்துறையில் புதிதாக 2.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.2012-13ம் நிதி ஆண்டிற்காக இதுவரை வளாகத் தேர்வு வாயிலாக ஒரு லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என நாஸ்காம் அமைப்பின் தலைவர் ராஜேந்திர பவார் தெரிவித்துள்ளார். நடப்பு நிதி ஆண்டில், ஐ.டி. துறையின் வருவாய் 16 சதவீதம் அதிகரிக்கும் நிலையில், வேலைவாய்ப்பு பெறுபவர்கள் எண்ணிக்கை 10 சதவீதம் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய ஐ.டி. நிறுவனங்கள் உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் அளித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவில் 25 ஆயிரம் பேருக்கு வேலை அளித்துள்ளதாக டி.சி.எஸ். நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இந்திய ஐ.டி. துறை அபார வளர்ச்சி கண்டு வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் இத்துறையின் வருவாய் 10 கோடி டாலராக இருந்தது. இது தற்போது பன் மடங்கு அதிகரித்து 10,000 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு உள்நாட்டிலும் வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது.

Tuesday, February 7, 2012

Google - Youtube சாதனை!

வீடியோ காட்சிகளுக்கென கூகுள், ஏற்கனவே இயங்கி வந்த யு--ட்யூப் தளத்தினை வாங்கிச் செம்மைப் படுத்தி, அடிக்கடி அதனை மேம்படுத்தும் செயலில் இறங்கியது. வாடிக்கையாளர்கள் தங்களின் வீடியோ பைல்களை அப்லோட் செய்திடவும், வீடியோ காட்சிகளைப் பார்க்க விரும்பு பவர்கள், தேடிக் கண்டறிந்து காணவும் பல வசதிகளையும் தேடல் பிரிவுகளையும் தந்துள்ளது.

இந்த இமாலய சாதனை இப்போது பல புதிய சிகரங்களை எட்டியுள்ளது. தினசரி இந்த தளத்தில் 400 கோடி வீடியோ காட்சிகள் பார்க்கப்படுகின்றன. ஒவ்வொரு நிமிடத்திலும் சராசரியாக 60 மணி நேர வீடியோ காட்சிகள் பைல்களாக அப்லோட் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு விநாடியிலும் ஒரு மணி நேர வீடியோ காட்சி அப்லோட் செய்யப்படுகிறது. அதாவது ஒவ்வொரு 24 விநாடிகளிலும் 24 மணி நேர வீடியோ மேலேற்றம் செய்யப்படுகிறது. இது தொடர்ந்து 25% அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம், கூகுள் அனைத்து பிரிவுகளிலும், நல்ல, தரமான வீடியோ காட்சிகளை அனுமதிப்பதுதான். கூகுள் இதனைக் கொண்டாடும் வகையில் தனியே தளம் ஒன்றை www.onehourpersecond.com என்ற முகவரியில் அமைத்துள்ளது. இங்கு சென்றால், இனிய இசை மற்றும் கேலிச் சித்திரங்களுடன் கூகுளின் சாதனையைப் பல வழிகளில் ஒப்பிட்டு கண்டு ரசிக்கலாம்.

Google - Facebook போட்டி!!


தன்னுடைய கூகுள் ப்ளஸ் மூலம், சரியான போட்டியைச் சென்ற ஆண்டில் பேஸ்புக் தளத்திற்கு வழங்கியது கூகுள். இது நடப்பாண்டில் இன்னும் அதிகமாகும் என்று இத்துறை வல்லுநர் களால் எதிர்பார்க்கப் படுகிறது. உலகின் மிகப் பெரிய சமூக தளமாக பேஸ்புக் விளங்குகிறது. பெரிய இன்டர்நெட் நிறுவனமாக கூகுள் இயங்குகிறது. இதில் சமூக தளத்தில் முதல் இடத்தைப் பெற இரண்டிற்கும் இடையே போட்டி நிலவுகிறது. இதன் மூலம் வரும் விளம்பர வருமானத்தை அதிக அளவில் கைப்பற்றவே இந்த போட்டி.

இந்தப் போட்டியில் இதுவரை பேஸ்புக் தளத்தின் கை தான் ஓங்கி உள்ளது. இருப்பினும் இந்த ஆண்டில் கூகுள் ப்ளஸ் சரியான போட்டியைத் தரும். இதனால், இந்த இரண்டினையும் பயன்படுத்து வோருக்கும் லாபம் தான். பலவிதமான புதிய வசதிகளைத் தந்து தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைப்பதுடன், புதிய வாடிக்கையளர் களையும் இழுக்க இவை இரண்டும் முயற்சிக்கும். அதே போல, தர்ட் பார்ட்டி என அழைக்கப்படும் பிற நிறுவனங்களும், இந்த இரண்டு தளங்களுக்குமான ஆட் ஆன் தொகுப்புகளைத் தந்து, இந்த சந்தையில் தங்களுக்குமான பங்கினைப் பெற முயற்சிக்கும்.

இந்நிலையில், 2012 முதல் பாதியில், பேஸ்புக் பங்குகளை வெளியிட்டு மூலதன நிதி திரட்டலாம். இது கூகுள் நிறுவனத்துடன் போட்டியிட கூடுதல் சக்தியைத் தரும். ஆனால், பங்கு வெளியீட்டிற்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றால், அந்த சூழ்நிலை பேஸ்புக் இணைய தளத்தைப் புரட்டிப் போட்டுவிடும். கூகுளின் கை ஓங்கிவிடும். எனவே தான் இந்த ஆண்டு இவை இரண்டின் இடையேயான போட்டி பல முனைகளில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.