Sunday, July 31, 2011

வேர் தேடும் வார்த்தைகள்!!!

உலக மயமாகிவிட்ட சில ஆங்கிலச் சொற்களின் உண்மையான மூலம் வேறு மொழிகளில் வேர் கொண்டிருக்கும். அந்த வேர் தேடிப் பயணம் போனால் புதிய புதிய தகவல்கள் கிடைக்கின்றன!

ரோமானியர்களின் தெய்வம் ஜீனோ மானடா. பல அபாயங்களை முன்கூட்டியே அறிவித்து அவர்களைக் காத்த கடவுளாகிய மானடாவின் பெயர், Moneo என்ற இலத்தீன வார்த்தையிலிருந்து வந்தது. பணத்துக்கு Moneo என்ற பெண் தெய்வத்தின் பெயர்தான் Money என்று ஆனது. Moneo அவங்க ஊர் தனலட்சுமி!!

பணம் என்றதுமே பட்ஜெட் என்ற சொல் ஞாபகத்துக்கு வரும். பட்ஜெட் என்பது, பகெட் என்ற பிரெஞ்சு சொல் மூலம் வந்தது. பகெட் என்றால் சிறிய தோல்பை என்று அர்த்தமாம்.

200 ஆண்டுகளுக்கு முன் சின்னக் கூழாங்கற்களை எண்ணிக்கை அறியப் பயன் படுத்தினர். அந்தக் கூழாற்கற்களுக்கு Calculi என்று பெயர். calculator வந்தது இப்படித்தான்.

வீட்டம்மாவை நிதி மந்திரி என்று பலர் சொல்வார்கள். வீட்டைப் பார்த்துக் கொள்வது என்பதற்காக கிரேக்க வார்த்தை Oikonomia இதிலிருந்துதான் economy என்ற சொல்லே பிறந்தது. பொருளாதாரத்தின் பிறப்பிடமே வீட்டு நிர்வாகம் தான்!!

உற்பத்திக்கு மனித சக்தியைப் பயன்படுத்தாமல் எந்திரங்கள் வந்துவிட்டன என்று வருத்தப்படுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. மனு, பாக்சுர என்ற இரு இலத்தீன் சொற்களில் இருந்துதான் manufacture என்ற சொல்லே வந்தது. அதற்கு அர்த்தமே கைகளால் செய்யப்படுவது என்பது தானாம்!!

”இவங்களையெல்லாம் கட்டி மேய்ப்பதற்கு பேசாம கழுதையோ குதிரையோ மேய்க்கலாம்” என்று எந்த மேனேஜராவது அலுத்துக் கொண்டால் வருத்தப்படாதீர்கள். maneggiare என்ற இத்தாலியச் சொல்லில் இருந்துதான் manager என்ற ஆங்கிலச் சொல்லே வந்தது.

maneggiare என்றால் குதிரை மேய்ப்பவர் என்று அர்த்தம்!!

கொலம்பஸ்: மிதந்து திரிந்த பறவை!!

பிறந்தார் என்று தெரியும். ஆகஸ்ட் 26 ஆ அக்டோபர் 31 ஆ என்று சர்ச்சை. அமெரிக்காவைக் கண்டறிந்தார் என்று தெரியும். கண்டறிந்த முதல் ஐரோப்பியரா இல்லையா என்பதில் சர்ச்சை. இப்படி, சர்ச்சைகளின் நாயகனாகவே சரித்திரத்தில் சித்தரிக்கப்படுபவர்தான் கிறிஸ்டோஃபர் கொலம்பஸ்.

இத்தாலியிலுள்ள ஜெனோவாவில் பிறந்த கொலம்பஸ்ஸின் தந்தை டொமினிகோ கொலம்போ, உல்லன் வியாபாரி. அவருடைய அம்மாவும் உல்லன் வியாபாரி ஒருவரின் மகள்தான். கொலம்பஸ் முறை சார்ந்த கல்வியில் பெரிதாக ஈடுபடவில்லை. ஆனால் எப்போதும் படித்துக் கொண்டேயிருப்பார்.

பத்தொன்பது வயதில் முதல் கப்பல் பயணம் மேற்கொண்டு, கியாஸ் தீவில் இறங்கிய கொலம்பஸ் அங்கேயே சில மாதங்கள் கழித்தார்.

இரண்டாவது பயணம் அவருக்கு இறக்கும் வரைக்கும் மறக்க முடியாததாய் இருக்கும். 1476ல், அட்லாண்டிக் கடலில் பயணம் செய்துபோது ஏற்பட்ட மோதலில் அவர் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. ஆறுமைல் தூரம் நீந்திக் கரை சேர்ந்தார் கொலம்பஸ்.

சைக்கிளில் இருந்து கீழே விழுந்தால் ஜென்மத்துக்கும் சைக்கிளையே தொடாதவர்கள் பலர். ஆனால், கொலம்பஸ் அப்படியில்லை. வணிக நிமித்தமாய் பலமுறை கடல் பயணம் மேற் கொண்டார்.

கொலம்பஸ்க்குக் கல்யாணம் ஆகும்முன்பே அவரது மாமனார் இறந்திருந்தார். ஆனாலும் இப்படியொரு மாப்பிள்ளை வருவார் என்று அவருக்கு முன்னரே தெரியும் போலும்!! மாமனார் வீட்டுச் சீதனமாய் கொலம்பசுக்குக் கிடைத்தது. அட்லாண்டிக் கடலின் காற்று வீசும் திசை, துள்ளலைகள் தொடர்பான விரிவான வரைபடங்களும் பட்டியலும்!

பட்டு மற்றும் வாசனைப் பொருட்கள் வணிகத்துக்காக ஐரோப்பா கடல் வழியாக சீன மற்றும் இந்தியாவுக்கான பயண வரைபடத்தை வகுத்தது. அதற்கு மாற்று வரைபடத்தை கொலம்பஸ் உருவாக்கியிருந்தார். அரசின் அங்கீகாரத்துக்காக அடம் பிடித்துக் கொண்டிருந்தார்.

போர்த்துகீசிய அரசவையில் அவர்தன் திட்டத்தை சமர்ப்பித்து அங்கீகாரம் கேட்டபோது, அவர் தலையை சுற்றி மூக்கைத் தொட முயற்சிப்பதாய் எல்லோரும் கேலி செய்தார்கள். பிறகு ஸ்பெயின் அரசவையில் திட்டத்தை சமர்ப்பித்தார். இந்த யோசனையை கொலம்பஸ் வேறெங்கும் விற்றுவிடக் கூடாது என்பதற்காக அவரை ஸ்பானிஷ் அரசு சம்பளம் கொடுத்து வெட்டியாய் உட்கார வைத்துக் கொண்டிருந்தது.

அதன்பின், போதிய நிதியுதவிகள் வந்தபிறகு 1492 ஆகஸ்ட் 3ல் தன் பயணத்தைத் தொடங்கினார். கேனரி தீவில் கொஞ்ச காலம் தங்கி, தனக்கும் கப்பலுக்கும் ரிப்பேர் எல்லாம் சரி செய்து கொண்டு செப்டம்பர் 6ல் கடல் கிழித்துக் கிளம்பினார்.

அவர் தூரத்தைக் கணக்குப் பண்ணி குழுவினருக்கு சொல்வதற்குள் கண்கள் பிதுங்கி விடும். உடன்வந்த மாலுமிகளுக்கு ஊர் ஞாபகமும், ஊர் திரும்புவோமா என்ற கலக்கமும் பிறந்ததால் கலகம் எழுந்து எழுந்து அடங்கியது.

65 நாட்களுக்குப் பின் 1492 அக்டோபர் 7ம் தேதி, பறவைகள் பறப்பது தெரிந்தது. அந்தத் திசை நோக்கி கப்பலைக் செலுத்த, கொலம்பஸ் கரை சேர்ந்தால் அந்த இடம் சமானாகே என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

1493 ஜனவரி 4 ஊர் திரும்ப நினைத்துப் புறப்பட்ட கொலம்பஸ், காற்றோடு போராடி, அந்த நூற்றாண்டின் மிக மோசமான புயலோடு தடுமாறி போர்த்துகீசிய நாட்டில் கரை சேர்ந்தார். அதற்குள் புதிய நிலப்பரப்புகளை அவர் கண்டறிந்த செய்தி, புயலைவிட வேகமாய் ஐரோப்பாவில் பரவியது. போர்த்துகீசிய நாட்டில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட கொலம்பஸ், ஸ்பெயின் நாட்டில் ஒரு கதாநாயகராக கருதப் பட்டு வரவேற்கப்பட்டார்.

இரண்டாவது பயணத்தை அதே ஆண்டில் செப்டம்பர் 24ல் தொடங்கினார் கொலம்பஸ்.

இப்போது இவர் போனது தங்க வேட்டைக்கு. புதிய பிரதேசங்களைக் கண்டறியும் ஆர்வத்தில் இவர் ஓர் ஆளுமையாக நிமிர்ந்தால் கூட பல நாடுகளில் வாழும் பழங்குடியினரை அடிமைப்படுத்தியது இவரது வாழ்வில் ஒரு கறுப்புப் புள்ளிதான். தங்கத்துக்கும் அங்கத்துக்குமாய் அடிமைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டனர்.

இப்போது கொலம்பஸ் தன் ஆளுமைக்குள் இருப்பவர்களே அஞ்சக் கூடியவராக விளங்கினார். தன் ஆணை களைக் கேளாத மாலுமிகளை தூக்கில் போட்டார்.

அவரைத் தலையில் வைத்துக் கொண்டாடிய ஸ்பெயின் அரசாங்கமே 1500இல் அவரைக் கைது செய்தது. அதற்குள் போர்த்துகீசிய பயணப் பறவையாகிய வாஸ்கோடா காமா இந்தியா வந்து திரும்பியிருந்தார்.

அரசோடு மோதி, கைப்பற்றிய நாடுகளின் வருமானத்தில் பங்கு கேட்டுக் கொண்டிருந்த கொலம்பஸ் 1506 மே 20ம் தேதி ஸ்பெயின் நாட்டில் இறந்தார்.

புதிய நிலங்களைக் கண்டறிந்த கொலம்பஸ்ஸின் சடலம் புதைக்கப் பட்ட இடத்தைக்கூட கண்டறிய முடியாத அளவு, சாவிலும் அவர் சர்ச்சை நாயகராகவே இருந்தார்.

++ மண்ணின் மீது மனிதனுக்காசை

மனிதன் மீது மண்ணுக்காசை

மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது – இதை

மனம்தான் உணர மறுக்கிறது++ என்ற கவிஞர் வைரமுத்துவின் வரிகள் கொலம்பஸ்ஸை நமக்கு நினைவூட்டுகின்றன.

வானளவு வளர்ந்தாலும் வேண்டாத நடவடிக்கைகளால் விழுந்த கொலம்பஸ் ஒரு விதத்தில் நம்பிக்கை. இன்னொரு விதத்தில் எச்சரிக்கை!!

வெற்றிக்கு ஒரு புத்தகம் - பத்தோடு பன்னிரண்டு..

சராசரிகளின் காலம் முடிந்துவிட்டது. போன தலைமுறையில், நீங்கள் வெற்றி பெறவேண்டுமென்றால் மற்ற எல்லோரையும்போல் "சராசரி'யாக உழைத்தாலே போதும், "சராசரி'யான திறமையே போதும், படிப்படியாக முன்னேறி நன்கு வெளிச்சத்துக்கு வந்துவிடலாம்.

ஆனால் இப்போது, "சராசரி'யாக இருப்பது போதாது. பத்தோடு பதினொன்றாக நிற்பவர்களை யாரும் மதிப்பதில்லை, காலம் அவர்களைச் சுலபமாக ஒதுக்கிச் சென்றுவிடுகிறது, போட்டி மிகக் கடுமையாகிவிட்ட இன்றைய சூழலில், மற்றவர்களைவிட ஏதேனும் ஒருவிதத்தில் ரொம்ப அபூர்வமாக இருந்தால் மட்டுமே நீங்கள் ஜெயிக்க முடியும்.

"சராசரி' வட்டத்தைத் தாண்டி மேலே வருவது எப்படி? அபூர்வமானவர்களாக நம்மை முன்னிறுத்திக் கொள்வது எப்படி? இதற்கான டிப்ஸ் நிரம்பி வழிகிற ஓர் அட்டகாசமான புத்தகம், "தி பிக் மூ' (The Big Moo). பல புகழ் பெற்ற எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், மேனேஜ்மென்ட் நிபுணர்கள் இணைந்து எழுதியிருக்கும் இந்தப் புத்தகத்தை சுவாரஸ்யமாகத் தொகுத்திருப்பவர் சேத் கோடின்.

ஆங்கிலத்தில் மூ என்றால், மாடுகள் எழுப்பும் குரல். ஒரு தொழுவத்தில் இருக்கும் எல்லா மாடுகளும் ஒரேமாதிரி கத்திக் கொண்டிருக்கும்போது, நாம் மட்டும் கொஞ்சம் சத்தமாகக் குரல் எழுப்பினால்தான், கூட்டத்திலிருந்து வெளிப்பட்டுப் "பளிச்'சென்று தெரிவோம். அதற்கான வழிகள் என்னென்ன? ஏராளமான உதாரணங்கள், குட்டிக்கதைகள், நிஜச் சம்பவங்களோடு இவற்றைச் சொல்லித் தருகிறது "தி பிக் மூ'.

அதிலிருந்து சில முக்கியமான டிப்ஸ் இங்கே:

* "அது சரிதான். ஆனா...' என்று அடிக்கடி சொல்கிறீர்களா? அந்தப் பழக்கத்தை முதலில் விடுங்கள். நீங்கள் ஒவ்வொருமுறை "ஆனா...' என்று இழுக்கும்போதும் ஒரு நல்ல விஷயத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறீர்கள் என்று அர்த்தம். அதற்குப் பதிலாக "ஆமா...' என்று சொல்லிப் பழகுங்கள்.

* மற்றவர்களைவிட ஒரு படி முன்னே சிந்திப்பது நல்ல பழக்கம். ஆனால், அது போதாது, இப்போதெல்லாம் எல்லோரும் ஒரு படி முன்னே சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே, நீங்கள் குறைந்தபட்சம் மூன்று படிகள் முன்னோக்கிச் சிந்திக்கப் பழகுங்கள்.

* ஒரு படம் ஜெயித்துவிட்டால், அதேமாதிரி பத்துப் படங்கள் வரும், ஒரு பாட்டு ஹிட்டாகிவிட்டால், அதேமாதிரி பத்தப் பாட்டுகள் வரும். காப்பியடிப்பது சுலபம், ஆனால் அடுத்தவர்களால் காப்பியடிக்கப்படும் அளவு ஒரிஜினலான ஓர் ஐடியாவைச் சிந்தித்து உருவாக்கி வெளியிடுவது கஷ்டம். நீங்கள் எதைச் செய்வது நல்லது? யோசியுங்கள்!

* நீங்கள் ஒரு ஹோட்டல் வைத்திருக்கிறீர்கள், அதைப் பெரிய அளவில் முன்னேற்ற வேண்டும் என்று விரும்புகிறீர்கள், அதற்கு மற்ற பெரிய ஹோட்டல்களை மட்டும் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தால் போதாது, பெரிய தொழிற்சாலைகள், அரசியல் கட்சிகள், சாஃப்ட்வேர் நிறுவனங்கள், விமான சேவை நிறுவனங்கள், சினிமா கம்பெனிகள் என்று சகலத்தையும் கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் தங்களுடைய துறையில் ஜெயிக்க என்னென்ன செய்கிறார்கள் என்று புரிந்துகொள்ளுங்கள். ஐடியாக்கள் எங்கிருந்தும் கிடைக்கலாம், உங்களுடைய கண்களும் காதுகளும் எப்போதும் திறந்திருக்கட்டும்.

- என். சொக்கன்

Friday, July 22, 2011

Win மொழி!!

"குருவே என் மீது எனக்கே நம்பிக்கை இல்லை' என்று வருத்தத்தோடு சொன்ன இளைஞனை நிமிர்ந்து பார்த்தார் குரு.

"ஏன்? என்ன பிரச்னை?' என்று கேட்டார் குரு.

"என்னிடம் நிறைய குறைகள் இருக்கின்றன. மற்றவர்கள் என்னைவிட திறமைசாலிகளாக தெரிகிறார்கள்' என்று சொன்ன இளைஞனின் பிரச்னை குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு கதையைச் சொல்லத் துவங்கினார்.

"ஒரு வேட்டைக்காரன் நாய் ஒன்றை வளர்த்து வந்தான். அந்த நாய்க்கு அபூர்வ சக்தி இருந்தது. அதனால் தண்ணீர் மீது நடக்க இயலும். வேட்டையாடிய பறவைகள் ஆற்றின் மீதோ, குளத்தின் மீதோ விழுந்து விட்டால் அந்த நாய் தண்ணீரில் நடந்து சென்று எடுத்துவரும். அந்த நாயைக் குறித்து அவனுக்கு ரொம்ப பெருமை.நாயின் சக்தியை தன் நண்பனுக்குக் காட்ட வேண்டும் என்று விரும்பினான்.

காட்டுக்குள் ஒரு ஏரியில் வாத்துகள், நாரைகள் நிறைந்து இருந்தன. அவற்றைக் குறி பார்த்து சுட்டான். சில வாத்துக்கள் விழுந்தன. உடனே அவனது நாய் தண்ணீர்மீது நடந்து சென்று வாத்துகளை கவ்வி எடுத்து வந்தது. இதைப் பார்த்து நண்பன் எதுவும் சொல்லவில்லை. மீண்டும் சில வாத்துகளை சுட்டான். மீண்டும் நாய் தண்ணீர்மீது நடந்து சென்று வாத்துகளை எடுத்து வந்தது. அப்போதும் நண்பன் எதுவும் சொல்லவில்லை. இவ்வளவு விசேஷ சக்தியைக் கொண்ட நாயைப் பார்த்து ஆச்சர்யம். நண்பனிடமே கேட்டுவிட்டான்.

"என்னுடைய நாயை கவனித்தாய்? ஏதாவது வித்தியாசமாக தெரிகிறதா' என்று கேட்டான். அதற்கு நண்பன், "ஆமாம் உன் நாய் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது, அதற்கு நீந்தத் தெரியவில்லை'' என்றான்.

இந்தக் கதையை குரு சொன்னதும், இருக்கும் திறமையைப் பார்க்காமல் இல்லாததை குறையாகச் சொல்வது தவறு என்று வந்தவனுக்குப் புரிந்தது. அப்போது குரு அவனுக்கு சொன்ன Win மொழி:
குறைகளைவிட குணங்களைப் பார்ப்பது நல்லது.

-ரஞ்சன்

Wednesday, July 13, 2011

facebook வாடிக்கையாளர்கள் 75 கோடி

டெக் க்ரஞ்ச் என்ற ஆய்வு நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, facebook தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவோர் எண்ணிக்கை 75 கோடியைத் தொட்டுள்ளது. மாதத்தில் குறைந்தது ஒரு முறையாவது இந்த தளம் வந்து செல்வோர் எண்ணிக்கை இது. இது சில நாடுகளில் உள்ள மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகமாகும். சில மாதங்களுக்கு முன், பேஸ்புக் தளத்தில் வெளியான அறிவிப்பில், அதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 50 கோடியாக இருந்தது. திடீரென 25 கோடி அதிகரித்தது வியக்கத்தக்க ஒரு விஷயமாகும். 2004 ஆம் ஆண்டு பேஸ்புக் தொடங்கப் பட்டது. 2010 ஆம் ஆண்டில் இதில் பதிவு செய்து பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50 கோடியை எட்டியது. அதாவது சராசரியாக ஆண்டுக்கு 10 கோடி பேர் சேர்ந்துள்ளனர்.

rundll32.exe பைலின் வேலையும் பயனும்!!

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு பைல் தான் rundll32.exe. எனவே இந்த பைல் இயங்கு வதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அது குறித்து நமக்கு Error Message கிடைக்கிறது. இதன் தன்மையினையும் செயல்படும் விதத்தினையும் அறிந்து கொண்டால் இந்த பைல் குறித்த சந்தேகங்கள் தெளிவாகும்.


rundll32.exe பைல் நம் கம்ப்யூட்டரில் டாஸ்க் மேனேஜரில் இயங்கிக் கொண்டிருப் பதனைப் பார்க்கலாம். RAM memory-யில் இந்த பைல் தங்கி இருந்து, மற்ற பைல்கள் செயல்பட உதவிடும். ஒன்று அல்லது இரண்டு புரோகிராம்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டால், இந்த பைல் பெயர், பிரச்சினை குறித்த எர்ரர் மெசேஜில் அடிபடுவது இயற்கையே.

கம்ப்யூட்டர் இயங்க அடிப்படையான dll. பைல்கள் இந்த ரன் dll. 32 பைல் வழியாக இயங்குகின்றன. ஒரு dll. பைலை நேரடியாக இயக்க முடியாது. exe. அல்லது காம் பைல்கள் இயக்கப்படுவது போல dll. பைல்கள் இயங்காது. விண்டோஸ் சிஸ்டத்திற்கு இவற்றை இயக்க இன்னொரு பைல் தேவைப்படுகிறது. அதுதான் rundll32.exe பைல். 32 பிட் dll. பைல்களை இது எடுத்து இயக்குவதால் இந்த பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.


இப்படி அடிப்படைச் செயல்பாட்டிற்கு இது அரிய பங்கினை அளிப்பதால் சில கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் உங்கள் கம்ப்யூட்டரில் rundll32.exe என்ற பைல் கெட்டுப் போய் விட்டதென்று மெசேஜ் கொடுத்து சரியான rundll32.exe பைல் வேண்டும் என்றால் கிளிக் செய்திடவும் என ஒரு Link தரும். இதில் கிளிக் செய்தால் பைல் இறங்கும். ஆனால் அது கெடுதலை விளைவிக்கும் புரோகிராமாக இருக்கும். எனவே இது குறித்து வரும் பாப் அப் மெசேஜ்களைப் பார்த்தால், சற்று கவனமாகச் செயல்பட வேண்டும்.