Thursday, December 29, 2011

அண்ணா பல்கலைகளை இணைக்க உயர்நிலைக் குழு அமைப்பு.

தமிழகத்தின் 5 அண்ணா தொழில்நுட்ப பல்கலைகள் இணைப்பை கண்காணிக்க, ஒரு உயர்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.ஆறு பேர் கொண்ட இக்குழுவின் தலைவராக, கூடுதல் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் இருப்பார். இதர உறுப்பினர்களாக, உயர்கல்வித் துறையின் முதன்மை செயலர், மாநில நிதித்துறை செலவினங்கள் பிரிவின் செயலர், சட்டத்துறை செயலர், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் மற்றும் உயர்கல்வித் துறையின் இணை செயலாளர் போன்றோர் இடம் பெற்றுள்ளனர். இதுதொடர்பான அரசு ஆணை சில நாட்களுக்கு முன்னர் பிறப்பிக்கப்பட்டது.

சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 இடங்களில் அமைந்திருக்கும் அண்ணா தொழில்நுட்ப பல்கலை அமைப்பை ரத்து செய்யும் ஆணை, கடந்த செப்டம்பர்(2011) மாதமே, அரசு உத்தரவில் இடம்பெற்றாலும், அதற்கான தேதியை அரசு குறிப்பிட வேண்டியிருந்ததால், உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும், இணைப்பு செயல்பாட்டில் பலவிதமான நடைமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டியிருந்தது.

ஏனெனில், சென்னை தவிர்த்த பிற அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் கீழ்வரும் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் கல்வி நிறைவு தொடர்பான ஏற்பாட்டை செய்ய வேண்டியிருந்தது. மேலும், பிற அண்ணா தொழில்நுட்ப பல்கலைகளின் கீழ் இயங்கிய பொறியியல் கல்லூரிகள், மீண்டும் சென்னை அண்ணா பல்கலையுடன் இணைக்கப்பட வேண்டிய நடைமுறைகள் உள்ளன. அதேபோன்று, அந்தந்த பல்கலைக்கழக கல்லூரிகளும், அண்ணா பல்கலைக்கழக கல்லூரியாக மாற்றப்பட வேண்டும்.

இவைத்தவிர, பிற அண்ணா தொழில்நுட்ப பல்கலைகள் மற்றும் பல்கலைக்கழக கல்லூரிகளின் சொத்துக்கள் மற்றும் ஆவணங்களை மாற்றுதல், அங்கே பணிபுரியும் ஊழியர்களின் பணி நிலைகளை மாற்றுதல் போன்ற சிக்கல்களும் உள்ளன. எனவே, முறையான திட்டமிடுதல் மற்றும் சரியான செயல்பாட்டு நடைமுறை போன்றவை இருந்தால்தான், இந்த இணைப்பு நடவடிக்கை வெற்றிகரமாகவும், சிறப்பாகவும் நடைபெறும்.

பொருட்களை இடமாற்றுதல் மட்டுமின்றி, பிராந்திய அலுவலகங்களை நிர்வகிப்பது மற்றும் அதற்கான அதிகாரங்கள் மற்றும் பணிகளை வரையறை செய்வது ஆகியவைக் குறித்தும், தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் இந்தக் குழு முடிவுசெய்ய வேண்டியுள்ளது. மேலும், சொத்துக்கள் பற்றிய விபரங்களைப் பெற, அந்தந்தப் பகுதிகளின் நிதி தணிக்கைத் துறைகளின் உதவியையும் இந்தக் குழு கோரும்.

தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவிற்கு, அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள், ஒரே "சென்னை அண்ணா பல்கலைக்கழகமாக" மாற்றப்படும் வரை, அனைத்துவிதமான நிதி, போக்குவரத்து மற்றும் நிர்வாக உதவிகளை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில், சில வசதிகளைக் கருத்தில்கொண்டு, சென்னை அண்ணா பல்கலைக்கழகம், 5 கல்வி நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டது. அதன்படி, சென்னை தவிர, கோவை, திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி போன்ற இடங்களிலும் அண்ணா தொழில்நுட்ப பல்கலைகள் ஏற்படுத்தப்பட்டு, அதன்கீழ் அப்பகுதியிலிருந்த பொறியியல் கல்லூரிகள் இணைக்கப்பட்டன. ஆனால், கடந்த 2011, மே மாதம், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, பிரிக்கப்பட்ட பல்கலையை, ஒரே "சென்னை அண்ணா பல்கலையாக" மாற்ற முடிவு செய்யப்பட்டு, அதற்கான சட்டமும் வெளியிடப்பட்டது.

இச்சட்டத்திற்கு, தமிழக ஆளுநர் ரோசய்யாவும் ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில், அப்பணிகளை விரைவுபடுத்தவும், முறைப்படுத்தவும் மேலதிகாரிகளைக் கொண்ட இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.


- Kalvimalar

Saturday, December 17, 2011

வெற்றிக்கு ஒரு புத்தகம் - தலைமைக் கண்ணாடி!!!

சச்சின் டெண்டுல்கருக்கும் மகேந்திர சிங் தோனிக்கும் என்ன ஒற்றுமை? என்ன வித்தியாசம்?இருவருமே பிரமாதமான கிரிக்கெட் வீரர்கள், நல்ல திறமைசாலிகள், உலக புகழ் பெற்றவர்கள், ஏகப்பட்ட ரசிகர்களைக் கொண்டவர்கள். ஆனால் ஒரு விஷயத்தில் இவர்கள் இருவரும் வித்தியாசப்படுகிறார்கள்.சச்சின் தன்னுடைய தனித்திறமையை அற்புதமாக வெளிப்படுத்தியதோடு நிறுத்திக் கொண்டுவிட்டார். ஓர் அணியைத் தலைமை தாங்கிப் பலரை அரவணைத்துச் சென்று வெற்றிகளைக் குவிக்கவில்லை. சிறந்த தலைவராகப் பெயர் வாங்கவில்லை.



இந்த விஷயத்தில் தோனி வெகு சமர்த்தர். ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகள், 20:20 போட்டிகள், ஐ.பி.எல். என்று அவர் கை வைத்த இடமெல்லாம் வெற்றி. "எங்க கேப்டன்' என்று பொதுமக்களும் அவரை அன்பாகக் கூப்பிடுகிறார்கள்.கிட்டத்தட்ட இதே கதையை நீங்கள் நிஜ வாழ்க்கையிலும் பார்க்கலாம். சிலர் தங்களுடைய வேலையை மட்டும் மிகச் சிறப்பாகச் செய்வார்கள். வேறு சிலர், மற்றவர்களையும் உடன் அழைத்துச் சென்று சாதிப்பார்கள். இரண்டாவது தரப்பினருக்குத்தான் நிறையப் பாராட்டுகளும் மரியாதையும் சமூக அந்தஸ்தும் சாத்தியப்படும்.அது சரி, இந்த முதல் வகையில் உள்ள அப்பாவிகள் இரண்டாவது வகைக்குத் தாவுவது எப்படி? இந்த ரகசியத்தைச் சொல்லித்தரும் எளிமையான புத்தகம் ஒன்று இப்போதுதான் சுடச்சுட வெளியாகியிருக்கிறது. அதன் பெயர் "தி ஷிஃப்ட் ஃப்ரம் ஒன் டு மெனி'. எழுதியவர் க்ரிஸ்மன் நஃப்சிங்கர்.


நம்மில் பலர் நல்ல தலைவர்களாக ஜொலிக்காமல் இருப்பதற்கு க்ரிஸ்மன் நஃபசிங்கர் சொல்லும் முக்கியமான காரணம், அவர்கள் சரியான நேரத்தில் கண்ணாடியை மாற்றுவதில்லை!கண்ணாடியா? அதென்ன?பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் மூக்குக் கண்ணாடிகளை அணிவது வழக்கம். இந்தக் கண்ணாடிகள்தான் அவர்களுடைய விழித்திரையின் லென்ஸ் பிரச்னைகளை சரி செய்து, பார்ப்பதற்கோ படிப்பதற்கோ வழி செய்கின்றன. ஒருநாள், கண்ணாடியை மறந்து வெளியே சென்றுவிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது இவர்களால் பார்க்க விரும்பிய பொருள்களைப் பார்க்க முடியாது, படிக்க விரும்பிய விஷயங்களைப் படிக்க முடியாது.இதே விஷயம் தலைவர்களுக்கும் பொருந்தும் என்கிறார் க்ரிஸ்மன் நஃப்சிங்கர்.

தனிப்பட்ட முறையில் நல்ல திறமைசாலியாக இருக்கிற ஒருவர் தலைவராக விரும்பினால், மனதளவில் அதற்கென்று ஒரு விசேஷக் கண்ணாடியை அணிய வேண்டும். தங்கள் பார்வையையே மாற்றிக் கொள்ள வேண்டும். அதுவரை தங்களுடைய சொந்தச் செயல்பாடுகள், திறமைகள், தகுதிகள், அனுபவத்தை மட்டும் யோசித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது எல்லோருக்காகவும் சிந்திக்கத் தொடங்க வேண்டும்.அதற்காக இந்தப் புத்தகம் நான்கு ஸ்டெப்களை விளக்கி சொல்கிறது. இவற்றை ஒவ்வொன்றாகக் கடந்து வந்தால், யார் வேண்டுமானாலும் வெற்றிகரமான தலைவராக முடியும்!


Step 1:

நான் என்பதை உணர்வது. அதாவது, என்னுடைய தனிப்பட்ட திறமைகள் என்ன, அவற்றை நான் எப்படிப் பயன்படுத்துகிறேன், எப்படி ஜெயிக்கிறேன் என்பதை உணர்வது. இது நான் எப்போதும் இழக்க மாட்டேன் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வது.


Step 2:


நான் என்பதில் இருந்து மெல்ல நகர்ந்து நாம் என்று நினைக்கத் தொடங்குவது. அதாவது நான் இதைச் செய்தேன் என்று பெருமைப்படுவதற்குப் பதிலாக, அதற்கு மற்றவர்கள் என்ன உதவி செய்தார்கள் என்று யோசிப்பது, அதன்மூலம் நாம் சேர்ந்து இதைச் செஞ்சோம் என உணர்வது.



Step 3:


எல்லாப் பொறுப்புகளையும் நம்மிடம் வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பகிர்ந்து தருவது. அவர்களுடைய வேலையைக் கவனித்து உற்சாகப்படுத்துவது. இதன்மூலம் முதல் ஸ்டெப் (அதாவது நான் என்கிற உணர்வு) மெதுவாக மங்கத் தொடங்கும்.


Step 4:

இந்த நிலையில் நம்முடைய தனிப்பட்ட முக்கியத்துவம் என்பது கிட்டத்தட்ட மறந்தே போயிருக்கும். வெற்றிகரமாகத் தலைமைக் கண்ணாடியை அணிந்து கொண்டிருப்போம். நிரந்தரத் தலைவர்களாக மாறியிருப்போம்!ஒரு நாளும் கண்ணாடியை மறக்காதீர்கள்!




- என். சொக்கன்

Friday, December 16, 2011

இப்படியும் சில விளம்பரங்கள்..!

தமிழில் வெளிவரும் செய்தித்தாள்களை பார்க்கும்போது ஏதோ ஒரு விளம்பர இதழ் போலவே தெரியும். காரணம் முதல் பக்கம் முழுவதும் விளம்பரமாக இருக்கும். சின்ன ஒரு கட்டத்தில் தலைப்பு செய்தியின் இரண்டு பாராக்களை போட்டுவிட்டு தொடர்ச்சி மூன்றாம் பக்கம் பார்க்க என்று போட்டிருப்பார்கள்.

ஆனால் தி ஹிந்து பத்திரிகை தனக்கென்று ஒரு விளம்பரக் கொள்கை வைத்திருக்கிறது. முதல் பக்கத்தினை பொறுத்தவரை கால்பக்கமோ அல்லது அதற்கும் குறைவான அளவிலோ மட்டுமே விளம்பரங்கள் வெளிவரும். காரணம் பேப்பரை பிரித்துப் படிப்பவர்களுக்கு அது செய்தி பத்திரிகையாக காட்சியளிக்க வேண்டும் என்பது தான்.

விளம்பரங்கள் தேவை. ஆனால் வெறும் விளம்பரங்களாக மட்டுமாக மாறிவிடக் கூடாது என்பது அந்நிறுவனத்தின் கொள்கை. அதனாலேயே அதற்கு விளம்பரங்கள் குவிகிறது. இந்தக் கொள்கையை குறித்துவைத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கும் உதவும்.

உங்கள் பேனாகூட விளம்பரம்தான்

என் நண்பர் ஒருவர் பார்க்கர் மட்டுமே பயன் படுத்துவார். அதன் மூலம் தன் அந்தஸ்தைப்பற்றி விளம்பரப்படுத்திக் கொள்வதாக நினைக்கிறார்.

2 ரூபாய் பேனா பயன்படுத்துகிற தேசத்தில் 200 ரூபாய் பேனா பயன்படுத்துகிறார் என்றால் பெரிய ஆள்தான் என்ற எண்ணத்தை பலரின் ஆழ் மனதில் அது ஏற்படுத்திவிடுகிறது.

இன்னுமோர் உதாரணம் பார்க்கலாம்.

பொதுவாக ரெடிமேட் சட்டையில் அதன் பிராண்ட் பெயர், காலரில் பொறிக்கப்பட்டிருக்கும். சில பிராண்டுகளில், அதன் பிராண்ட் சிம்பளை பாக்கெட்டில் எம்ப்ராய்டரி செய்திருப்பார்கள். உதாரணத்திற்கு குரோக்கடைல் சர்ட்டில் முதலையை சின்னதாக எம்ப்ராய்டரி செய்திருப் பார்கள்.

எல்லா நிறுவனங்களும் தன் பிராண்ட் பெயரை சர்ட்டில் உற்றுப்பார்த்தால் தெரியும்படி பதிவு செய்திருப்பார்கள். ஆனால் பேசிக் சர்ட்டில் பேசிக் என்ற அதன் பிராண்ட் லேபிளை காலரில் மட்டும் இல்லாமல் சட்டையின் பட்டன் பகுதியில் எல்லோருக்கும் தெரியும்படி பெரிதாக வைத்திருக்கிறார்கள்.

விசாரித்தபோது பேசிக் ஷோரூம் வைத்திருக்கும் நண்பர் சொன்னார், “பேசிக் போன்ற பிராண்டுகள் எல்லாம் பெருமையின் அடையாளம். பேசிக் அணிந்திருக்கிறேன் என்பதுகூட விளம்பரம்தான்”.

நான் யோசித்தேன். அது பேசிக்கிற்கு விளம்பரமா? இல்லை பேசிக் மூலம் நமக்கு விளம்பரமா? இரண்டும்தான்.

விளம்பரத்தின் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை பயன்படுத்தும்போது, அதுவே கூட நமக்கும் விளம்பரமாக அமைகிறது.

உங்களை விளம்பரம் செய்து உயருங்கள். நீங்கள் உயர்ந்த பின் நீங்கள் எங்கு சென்றாலும் அந்த இடம் விளம்பரமாகும். ரஜினியால் பாபாஜி புகழ் பெற்றதைப்போல…

Tuesday, December 6, 2011

உலகின் சிறந்த ஆசிரியர் பட்டியலில் சூப்பர் 30 நிறுவனர்!

பீகார் மாநிலத்தில் ஐஐடி-ஜேஇஇ தேர்வு எழுதும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கும் வகையில் இயங்கி வரும் சூப்பர் 30 பயிற்சி மையத்தின் நிறுவனரான ஆனந்த் குமார், உலகின் தலை சிறந்த ஆசிரியர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் மோனாகல் என்ற ஆங்கிலப் பத்திரிக்கை மேற்கொண்ட ஆய்வின் இறுதியில் வெளியான உலகின் சிறந்த 20 ஆசிரியர்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து ஆனந்த் குமார் ஒருவரது பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது.


ஏழை மாணவ சமுதாயத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக சேவையாற்றி வருபவர் என்று அவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பாலிவுட் நடிகர்களை விட மிகவும் புகழ்பெற்றவராக ஆனந்த் குமார் உள்ளார் என்றும் பத்திரிகை கூறியுள்ளது.


பீகாரில் உள்ள ஏழை மாணவர்கள் தற்போது ஐஐடியில் படிக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணகர்த்தாவாக ஆனந்த் குமார் உள்ளார். ஐஐடி-ஜேஇஇ தேர்வுகளில் பீகார் மாணவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகளாக முக்கிய இடம் பெறுவது சர்வதேச அளவில் மீடியாக்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.


சூப்பர் 30 பயிற்சி மையம், ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு இலவசமாக தங்குமிடம், உணவு கொடுத்து பயிற்சி அளிக்கிறது. தற்போது சூப்பர் 30 மாணவர்கள் அனைவருமே ஐஐடி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர் என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.


சர்வதேச அளவில் ஆசிரியர்கள் பட்டியலில் இடம்பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கும் ஆனந்த் குமாரை பல்வேறு வெளிநாட்டு மீடியாக்கள் தொடர்பு கொண்டு இலவச பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் பற்றி கருத்துக்களை கேட்டு வருகின்றன.


இவர் தற்போது சர்வதேச அளவில் புகழ் அடையவில்லை. ஏற்கனவே பல வெளிநாட்டு பத்திரிகைகளில் இவரது புகழ் பாடப்பட்டுள்ளது. அவ்வளவு ஏன், இவரது இலவசப் பயிற்சி மையத்தை அடிப்படை கதையாக வைத்து இரண்டு திரைப்படங்கள் கூட வெளியாகி விருதுகளை வென்றுள்ளன.


கேம்பிரிட்ஜ் பல்கலையில் படிக்க வாய்ப்பு கிடைத்தும் ஆனந்த் குமாரால், முழுக் கல்விக் கட்டணத்தையும் செலுத்த வழியில்லாமல் உயர் கல்விக் கனவு தகர்ந்து போனது. அந்த தோல்வியை மற்ற ஏழை மாணவர்களது வெற்றிப் படிகட்டுகளாக மாற்றினார். 2002ம் ஆண்டில் சூப்பர் 30 என்ற இலவச பயிற்சி மையத்தைத் துவக்கினார். 24 மணி நேரத்தில் 16 மணி நேரங்களை கல்விக்காகவே செலவிட்டார். இலவச பயிற்சி மையத்தைத் துவக்கி பல ஏழை மாணவர்களின் சாதனைக்கு துணையாக நிற்கின்றார்.

Monday, November 7, 2011

குளு குளு சுற்றுலா: கொழுக்குமலை!!!


உலகத்திலேயே மிக உயரமான இடத்தில் தேயிலை விளையும் ஒரே இடம்தான் கொழுக்குமலை. வருடம் முழுவதும் குளிந்தே இருக்கும் மலையும் இதுதான். இந்தக் கொள்ளை அழகு கொண்ட குளு குளு கொழுக்குமலை அமைந்திருப்பது தமிழகத்தில் என்பதே சிறப்புதான்! வாருங்கள். குளு குளு மலைக்குப் பயணிப்போம்.

தேனி மாவட்டம் மேற்குத் தொடர்சசி மலைக்குக் கீழ் அமைந்துள்ள பசுமையான மாவட்டம். தேனியிலிருந்து மேற்கு திசையில் பார்த்தால் உயர்ந்த மலைக் குன்றுகளை சுற்றிச் சுற்றி மேகங்கள் விளையாடியடி தெரிவதுதான் மேற்குச் தொடர்ச்சி மலை. மலைகள் எப்போதும் ஆகாயத்துடன் பேசிக்கொண்டே இருக்கும் அவ்வளவு உயரம் மலைகளும் மேகங்களும் ஆகாயம் தொட்ட அழகிய இடம்தான் கொழுக்குமலை.


தேனி- போடி கடந்து மூணாறு சாலையில் பயணித்தால் பசுமையை ரசித்தபடி வளைந்து நெளிந்து செல்லும் போடி மெட்டுசாலை. இங்கேயே குளிர் நம்மை ஒட்டிக்கொள்ளும் பரவசம், இதமாக போடி மெட்டு கடந்து பசுமைப் பயணம் தொடர வருவது பூப்பாறை.


தேயிலை மலைத்தோட்டம் நிறைந்த பூப்பாறை கடந்து பெரிய கானல், சின்னக்கானல், அதனருகே ரம்மியமான பரந்து விரிந்து கிடைக்கும் டேம்தான் யானை இரங்கல் டேம். தேக்கடிபோல் தேயிலை மலைகளின் காலடியில் வளைந்து வளைந்து செல்லும் நீண்ட நீர்த்தேக்க டேம். பார்த்து ரசித்து பரவசமடையும் ரம்மியமாக அமைந்துள்ளது. அடுத்து சூடு பார்க்காத மலை நகரம் சூரியநெல்லி, கொழுக்குமலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் நுழைவுவாயில்தான் சூரியநெல்லி.

இங்கிருந்து கொழுக்கு மலைக்கு ஜீப்பில்தான் செல்லமுடியும். அவ்வளவு உயரமான மலைச்சாலை.
சுற்றியுள்ள சில மலை கிராமங்களுக்கு இன்றைக்கும் குதிரை சுமையாகத்தான் உணவுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. கொழுக்குமலைக்குச் செல்வதற்கு முன் கண்ணுக்கு எட்டிய தூரம் தேயிலைத் தோட்டங்கள்தான். அந்த பசுமையோடு குளிர்ந்த மேகக் கூஞூடடம் நம்மோடு கொஞ்சி விளையாடிக் கொண்டே வரும். அதோடு சாரல் மழையும் நம்மோடு சங்கம்மாகும்.

அழகான மலையும் சாரல் குளிர்க்காற்றும் நம்மை குஷிப்படுத்தும் உணர்வே தனி சுகம். கடல் மட்டத்தில் இருந்து 8100 அடி உயரத்தில் அமைந்த பசுமையான மலைதான் கொழுக்கு மலை. இந்த மாலையில் விளையும் தேயிலை உலக அளவில் ஃபேமஸ். ஆர்கானிக் இயற்கை முறைப்படி தயாராகும் இந்த தேயிலை உற்பத்தியை சுற்றுலாப் பயணிகள் ஃபேக்டரிக்குள் சென்று பார்க்கலாம். வருடம் முழுவதும் குளிரும் தமிழகத்தின் தலைசிறந்த இடமான இங்கிருந்து போடி, குரங்கணி, தேனி மாவட்ட பள்ளத்தாக்குப் பகுதிகளையும், கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன், சென்ட்ரல் ஸ்டேஷன் என பசுமையான பகுதிகளையும் பார்த்து ரசிக்கலாம்.

"மைனா' படம் எடுத்தது இங்கேதான்.

எப்படிச் செல்வது?


தேனி - போடி - போடிமெட்டு - கொழுக்குமலை பஸ் வசதி உண்டு. ஜீப்பிலும் போகலாம். போடிமெட்டில் தங்க நல்ல உணவு விடுதிகள் உண்டு.



Sunday, October 23, 2011

மனிதனை சாய்க்கும் மனவியல்பு சிக்கல்கள்!!

மனவியல்வு சிக்கல்(காம்ப்ளக்ஸ்) இன்று ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் ஒரு பொதுப் பிரச்சினையாக இருக்கிறது. ஒரு மனிதனுக்கு அதிகப்படுத்தப்பட்ட அளவில் சுய மதிப்பீடு இருப்பின், அவர் பிறரை விட தன்னை உயர்வாக நினைக்கத் தொடங்குகிறார். மனிதனை மிருகத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது இந்த சுய மதிப்புதான்.

இந்த அதிகப்படுத்தப்பட்ட சுய மதிப்பு சுபாவமானது, ஒரு மனிதனை Superiority complex என்ற நிலைக்குத் தள்ளுகிறது. இந்த மனப் பாங்கானது, அறிவுப்பூர்வ நிலையிலிருந்து ஒரு மனிதனை திருப்பி, அவனை தவறான கருத்தியலுக்குள் செலுத்தி, அவனது ஆளுமையில்(Personality) பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஒருவர் தன்னுடைய சுய நன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால், வேறு யார் அவரின் நலனில் அக்கறை செலுத்துவர் என்ற கேள்வி எழுவது இயற்கையே. மனித மனமானது, இயல்பிலேயே தன்னுடைய சுய நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியது. ஆனால் சமூகத்தில் முக்கியத்துவம் பெற நினைக்கும் ஒருவர் தன்னோடு சேர்த்து மற்றவர்களையும் பார்க்க வேண்டும்.

ஒரு மனிதனுக்கு Superiority complex இருந்தால், அவர் தன்னைச் சுற்றியுள்ள பிற மனிதர்களை சமமாக மதிக்கவில்லை மற்றும் எந்தவித நல்ல ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் யாரிடமிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அர்த்தம். இந்தவிதமான மனோநிலை ஒரு தனிமனிதனுக்கு மட்டுமே உரித்தானது என்றில்லை, ஒரு சமூகத்திற்கு, ஒரு அரசியல் கட்சிக்கு, ஏன், ஒரு நாட்டிற்கே உரித்தானது. (உம்: வலுவான ஒரு பெரிய நாடு சிறிய நாடுகளை மதிப்பதில்லை மற்றும் அதை சுரண்டுகிறது) Superiority complex மூலம் ஒரு மனிதனுக்கு ஏற்படும் தீமையை விட, Inferiority complex மூலம் அதிக தீமை விளைகிறது. தாழ்வு மனப்பான்மை உள்ள ஒரு மனிதனால் எதையுமே சாதிக்க முடியாது. ஒரு மனிதன் பெரியவனா? அல்லது சிறியவனா? என்பது, அவன் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறான் என்பதை வைத்தே அமைகிறது.

உங்களுடைய பலவீனத்தை மற்றவர்களிடம் வெளிப்படுத்தி, உங்களை மற்றவர் ஆதிக்கம் செய்ய நீங்கள் அனுமதித்து விட்டால், மனவியல்பு சிக்கல்களால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்று அர்த்தம். உங்களது தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட ஒரு எளிய வழி என்னவெனில், இந்த உலகில் கடவுள் அல்லது இயற்கையைவிட உயர்ந்தது எதுவுமில்லை என்ற எண்ணத்திற்கு நீங்கள் வருவதுதான். அப்படி நினைக்கையில், உங்களுக்கு மனஅமைதி உண்டாகிறது. நினைத்ததை செய்யும் துணிவு கிடைக்கிறது. பிற மனிதர்களின் திறமைகளைப் பார்த்து நீங்கள் மிரள மாட்டீர்கள். ஏனெனில், உங்களிடம் இருக்கும் திறமையை நீங்கள் பயன்படுத்துவீர்கள்.


மனவியல்பு சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கான சில வழிமுறைகளை இங்கு அலசுவோம்.....



எதிர்மறை எண்ணத்தை ஒழித்தல்:
உங்களின் மனதை ஒரு துயர சம்பவம் வாட்டினால் அதை நீக்க, ஒரு மகிழ்ச்சியான சம்பவத்தை நினைவில் கொண்டு வரவும். ஒரு தோல்வி சம்பவம் நினைவில் வந்தால், வெற்றி சம்பவத்தை அங்கே கொண்டுவந்து இருத்தவும். சிறந்த எதிர்காலம் நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஒவ்வொரு மனிதனின் வாழ்வாதாரமாக இருக்கிறது. எனவே அந்த நம்பிக்கையை மனதில் இருத்தி, மனதிலிருக்கும் எதிர்மறை எண்ணத்தை ஒழிக்கலாம்.



தடைகளை அறிந்து களைதல்:
நீங்கள் நோய்வாய்ப்பட்டு, அதற்காக ஒரு மருத்துவரை நாடிச் செல்கையில், உங்களுக்கு என்ன நோய் இருக்கிறது என்று மருத்துவர் முதலில் ஆய்வு செய்வார். நோயை உறுதி செய்த பின்புதான் உங்களுக்கான மருந்துகளை அவர் தருவார். பின்னர்தான் நோய் குணமாகும். அதேபோல்தான், உங்களின் கவலைக்கு காரணமான, முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் விஷயங்கள் எவை என்பதை முதலில் கண்டறிய வேண்டும். அவற்றை களைந்தால்தான் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்.


தனித்தன்மை:
இந்த உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. தனது விருப்பத்தை அடைய ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதத்தில் முயற்சியை மேற்கொள்வார். எனவே, ஒருவர் பின்பற்றும் அதே வழியை இன்னொருவர் குருட்டுத்தனமாக பின்பற்ற வேண்டியதில்லை.


நல்ல ஆலோசகரைப் பெறுதல்:
ஒருவர் தன்னைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்வது எளிதான விஷயமல்ல. நமது பலம் மற்றும் பலவீனம் குறித்து நமக்கே பலவித சந்தேகங்கள் இருக்கும். நமக்குள் இருக்கும் அவநம்பிக்கைக்கு காரணமாக, சிறுவயதில் நடந்த சில கெட்ட சம்பவங்களும் இருக்கலாம். எனவே அவற்றிலிருந்து மீண்டு, நம்மை நாமே அறிந்துகொள்ள ஒரு சிறந்த மனநல ஆலோசகரை நாடலாம்.



என்னால் முடியும்:
இது ஒரு மந்திர வார்த்தைப் போன்றது. இந்த வார்த்தையை தியானம் செய்வதுபோல், ஒரு நாளைக்கு 10 முறையாவது திரும்ப திரும்ப சொல்லலாம்.


திறன்களை மதிப்பிடுதல்:
ஒரு மனிதனின் திறன் அவனது உடல், அறிவு மற்றும் மனம் ஆகிய 3 அம்சங்களை உள்ளடக்கியது. இந்த அம்சங்களைப் பற்றிய சுய மதிப்பீட்டை ஒருவர் சரியாக செய்து விட்டால் அவருக்கு வெற்றிதான். அதேசமயம் குறைவாக செய்துவிட்டால், தாழ்வு மனப்பான்மையில் வீழ்ந்து விடுவோம்.


கடவுள் உங்கள் பக்கம்:
உங்களுக்கு ஆதரவாக யாருமே இல்லை, அனைவருமே எதிர்பக்கம் இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் அனைவரினும் மேலான கடவுள் உங்கள் பக்கம் எப்போதும் இருக்கிறார் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்க வேண்டும். இந்த எண்ணத்தின் மூலம் உங்களின் தாழ்வு மனப்பான்மை மறைந்து தைரியம் பிறக்கும்.


குறிப்பு:


வெறும் ஆலோசனைகளை படித்துவிட்டால் மட்டுமே மனவியல்பு சிக்கல்களிலிருந்து விடுபட்டுவிட முடியாது. வாழ்க்கையின் ஒரு நீண்ட முயற்சியாக அது இருக்கிறது. சிறு வயதில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் நாம் வாழும் சூழல் போன்றவை நம் மனநிலையை கட்டியமைத்தாலும், பிறப்பிலேயே கிடைக்கும் சில அடிப்படை குணவியல்வுகள் பற்றியும் நாம் இங்கே யோசிக்க வேண்டியுள்ளது.

உலகத்திலேயே பெரிய உலகம் மனிதனின் மனம்தான். ஒரு மனிதன் முதலில் தனது மனதுக்குள்ளும், பிறகு இந்த உலகத்திற்குள்ளும் வாழ்கிறான். ஒரு மனிதன் தனது மன உலகை எவ்வாறு வைத்துக்கொள்கிறான் என்பதைப் பொறுத்தே அவனது புற உலக வாழ்க்கை அமைகிறது. மனதுக்குள் நடக்கும் போராட்டம்தான், புற உலகில் வேறொரு போராட்டமாக உருவெடுக்கிறது. ஒரு மனிதன் மனோரீதியாக வெற்றியடைந்தாலே, புற உலக வாழ்க்கையில் எளிதாக வெற்றியடைந்து விடுவான். இதுவே காலம்காலமாக நடைமுறை உண்மை.

ஒரு மனிதன் மகா யோகியாக மாறுவதும், பெரும் ஞானியாக வாழ்வதும், பணத்தாசை பிடித்து அலைவதும், தலைவனாக வேண்டும் என்று ஏங்குவதும், அஞ்சி அஞ்சியே வாழ்வதும், கிடைத்தது போதுமென்று நினைப்பதும், எதிலுமே திருப்தியடையாமல் இருப்பதும், எப்போதுமே சோகத்துடனோ அல்லது மகிழ்ச்சியுடனோ இருப்பதும், வாழ்வை ஆரோக்கியமாக அமைத்துக் கொள்வதும், தற்கொலை செய்து கொள்வதும், மரணம் வரை சென்று மீள்வதும், அடுத்தவரை அண்டியே வாழ்வதும், எப்போதுமே தன்னிச்சையாக செயல்படுவதும், எதிலும் மிகையாக செயல்படுவதும், எதிலும் சோம்பேறியாக செயல்படுவதும், எப்போதும் நடுநிலையாக செயல்படுவதும் ஒருவரின் உள்மனதிலேயே தீர்மானிக்கப்படுகிறது.

மனவியல்பு சிக்கல்கள்(Complexes) உள்மன செயல்பாடுகளில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இந்த Complexes மூலமே ஒரு மனிதனின் அடிப்படை மனக் கட்டுமானம் அமைகிறது. எனவே, இப்பிரச்சினையை சரிசெய்வது மிக முக்கியம். இரண்டு வகை மனவியல்பு சிக்கல்களிலிருந்தும்(Superioriy and Inferiority complexes) விடுபட்டு, மனதை சரியான சுயமதிப்பீட்டு நிலையில் வைத்திருப்பதே நிம்மதியான மற்றும் வெற்றிகரமான வாழ்விற்கு வழி.


உளவியல் ஆலோசனைகள், தியானம், சிறந்த புத்தகங்களைப் படித்தல், நல்ல நண்பர்கள், ஒழுக்கமான வாழ்க்கை, உடல் ஆரோக்கியம் போன்றவற்றின் மூலம் மனவியல்வு சிக்கல்களை ஒருவரால் வெல்ல முடியும்.

Saturday, October 15, 2011

முகங்கள் : தொழில் புரட்சித் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ்!


இருபத்து நூற்றாண்டின் மிகப்பெரும் டெக்னோ ஆளுமைகளில் முக்கியமானவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.அவருடைய மரணம் எதிர்பார்த்த ஒன்றுதான். கணையத்தில் புற்றுநோய் அளவுக்கு மீறிப் போய் விட்டதாக ஒரு சில மாதங்களுக்கு முன்பாகவே தெரிந்து விட்டதால், தன் அத்தனை வேலைகளில் இருந்தும் விலகி, அமைதியாகத் தன் மரணத்துக்காகக் காத்திருந்தார். அந்த தொழில்நுட்ப மன்னர். இத்தனைக்கும் ஸ்டீவ் ஹார்ட்வேர் இன்ஜினீயரோ, புரோக்கராம் எழுதும் சாஃப்வேர் நிபுணரோ அல்ல. அவர் டெக்னாலஜியை ஒருங்கிணைத்த சரியான தலைவர். எல்லா வேலைகளையும் முதலாளியே பார்க்க வேண்டியதில்லை. சரியான ஆட்கள் சரியான முறையில் அவற்றை செய்தாலே போதும் என்கிறத தத்துவத்தில் வெற்றி கண்டவர் ஸ்டீவ்.

சிரியா நாட்டிலிருந்து கலிபஃபோர்னியாவுக்கு வந்த ஒரு முகம்மதியே பேராசிரியருக்கும் அமெரிக்கப் பெண்மணிகளுக்க பிறந்த ஸ்டீவ் தங்களால் வளர்க்க முடியாததால் யாராவது தத்து எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்தார்கள் அவர்கள் பால் மற்றும் கிளாரா ஜாப்ஸ் தம்பதி அந்தக் குழந்தையைத் தத்தெடுத்துக் கொண்டார்கள் இளம் வயதிலேயே ஸ்டீவின் பார்வை கம்ப்யூட்டரின் பக்கம் விழுந்து விட்டது இசை, சினிமா, தகவல் தொடர்பு இவை கம்ப்யூட்டர் மூலம் பல்வேறு எல்லைகளைக் கடக்கும் என்று அவருக்குத் தோன்றியது. அதை மெல்ல மெல்ல செயல்படுத்தினார். கடைசியில் 83 பில்லியன் டாலர்களை அவர் சம்பாதித்தாக ஓர் குறிப்பு சொல்கிறது. 1976-ம் வருடம் ஒரு கார் ஷெட்டில் தன் நண்பர் ஸ்டீஃபன் வொஸ்நய்க்குடன் சேர்ந்து ""ஆப்பிள்'' கம்பöனியைத் தொடங்கினார். ஆப்பிள்தான் மனித ஆசைக்குக் காரணம் என்பதால் அந்தப் பெயரை வைத்திருக்கலாம். எல்லோரும் எண்களையும் டெக்னாலஜி சம்பந்தப் பட்ட குறியீடுகளையும் தங்கள் நிறுவனப் பெயராக வைத்த போது ஸ்டீவ் வைத்த "" ஆப்பிள்'' அவருடைய கவித்துமான மனதையே காட்டியது. நான்கே வருடங்களில் 600 மில்லியன் டாலர்களை விற்பனையில் எட்டிப் பிடித்த ஆப்பிள் நிறுவனம் புகழ்பெற்ற ஃபார்ச்சூன் பத்திரிகையின் டாப் 500 உலக நிறுவன லிஸ்டில் இடம் பெற்றது தொழில் வரலாற்றில் இத்தனை வேகமான வளர்ச்சியை எந்த நிறுவனமும் பெற்றதில்லை.

ஆப்பிள் ஆரம்பித்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாக்கிண்டோஷ் எளிய வகை கம்ப்யூட்டர்களை அவர் அறிமுகப்படுத்தினார். பழையன கழிதலும், புதியன புகுதலும் அத்தனை சுலபாக நடந்து விடுவதில்லை மாக் (செல்லமாக) கம்ப்யூட்டர்கள் மார்க்கெட்டில் சக்கைபோடு போட்டன . ஆனால் தான் ஆரம்பித்த ஆப்பிள் கம்பெனியின் இருந்தே ஸ்டீவ் வெளியேற வேண்டிய நிலையம் ஏற்பட்டது. அப்போது கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பக்கம் திரும்பினார் ஸ்டீவ் ஹாலிவுட் ஸ்பெஷல் எஃபெக்ட் மன்ன் ஜார்ஜ் லுகாஸிடமிருந்து ஒரு சின்ன கிராஃபிக்ஸ் கம்பெனியை விலைக்குவாங்கினார். தொழில்நுட்ப ஜீனியணுஞூ இளைஞர்களைத் தேடித் தேடி அதில் சேர்த்தார். "தி டாய் ஸ்டோரி சூப்பர் ஹிட் கிராஃபிக்ஸ் படம் அதிலிருந்து வெளி வந்தது பிக்ஸர் அனிமேஷன் ஸ்டூடியோஸ் என்று தன் கம்பெனிக்குப் பெயிரிட்டார். வரிசையாகப் பல அனிமேஷன் படங்கள் அங்கே பட்டைத் தீட்டப்பட்டு உலகெங்கும் சூப்பர் ஹிட் ஆகின. பல அகாடமி விருதுகளைப் பெற்றது ஸ்டீவின் சேவை தங்களுக்கு அவசியம் என்பதை ஆப்பிள் உணர்ந்து அவரை மிகுந்த மரியாதையுடன் மீண்டும் இணையுமாறு அழைத்தது.

கிட்டத்தட்ட 12 வருட வனவசாத்திற்குப் பிறகு 1997-ம் வருடம் மீண்டும் ஆப்பிளுக்குத்திரும்பினார் ஸ்டீவ். அப்போது தான் செல்ஃபோன் என்னும் கையடக்க புயல் உலகை மையம் கொண்டிருந்தது. ஸ்டீவுக்கு அதன் எதிர்கால சாத்தியங்கள் ஆச்சர்யமாக இருந்தன. அதன் சிறிய திரையும், சிப்புகளும் இணைப்புகளும் உலகையே உள்ளங்கைக்குள் கொண்டு வந்து விடும் என்பது அவருடைய தீர்க்க தரிசனம் வரிசையாக ஐ பாட் ஜ ஃபோன், ஐ பேட் என்று பிற்பாடு அவர் தான் தூள் கிளப்ப ஆரம்பித்தார். பெப்ஸி கோலாவின் தலைமை நிர்வாக அதிகாரியைப் பார்த்து ஸ்டீவ் ஒரு முறை கேட்டார்.. ""வாழ்க்கையின் எஞ்சிய பகுதியை இதைப் போன்ற சர்க்கரைத் தண்ணீரை விற்றே தள்ள போகிறீர்களா? அல்லது உலகையே மாற்றக் கூடிய ஏதாவது ஒரு விஷயத்தில் இறங்கப்போகிறீர்களா? தன் தயாரிப்புகளில் அத்தனை சீக்கிரம் திருப்தியுற மாட்டார் ஸ்டீவ். ஐ பாட் கருவிகள் இரண்டு மாடல்கள் கடைசியாக ஒகே செய்யப்பட்ட நிலையில் கப்பல் ஏற்றும் கடைசி நிமிடத்தில் அந்த ஆர்டரை ரத்து செய்து புது மாடல்களை செய்யும்படி உத்தரவிட்டவர் அவர். வெறும் புதிய டெக்னாலஜி கண்டுபிடிப்புகளால் மட்டும் பயன் இல்லை. சுந்திரமான கலைகளுடன் அந்த தொழில்நுட்பம் திருமணம் செய்ய வேண்டும். மனித நேயத்துடன் திருமணம் செய்து நம் இதயத்தை அந்த தொழில் நுட்பம் பாடச் செய்ய வேண்டும் என்று ஒரு முறை யுனிவர்ஸிட்டி பேச்சில் குறிப்பிட்டார் ஸ்டீவ்.

56வயதில் அவருடைய இதயம் தன் பாடலை நிறுத்திக்கொண்டது. இன்று உங்கள் வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கலாம். அதில் நங்கள் பாட்டு கேட்கலாம். யூ டியூபில் வீடியோ பார்க்கலாம் மெயில் அனுப்பி சாட் செய்யலாம். மொபைல் போனில் இருந்து ஏழாம் அறிவு படக் காட்சி டிக்கெட்டைப் பதிவு செய்யலாம். மின்சாரக் கட்டணத்தை அதன் மூலம் செலுத்தலாம். இவற்றுக்கெல்லாம் பின்னயில் எப்போதும் நீல நிற ஜீன்ஸும் முழுக்கை ஸ்வெட்டரும் அணிந்த ஸ்டீவ் ஜாப்ஸ் இருப்பார்.


மரணம் பற்றி அவர் குறிப்பிட்டவற்றில் சில:

இதுதான் உன்னுடைய கடைசி தினம் என்பது போல் தினமும் நீ வாழ்ந்தால், வாழ்க்கையின் பூரணத்துவத்தை உணரலாம். சிறு வயதில் நான் படித்த இந்த வாக்கியம் என் மனதில் ஆழப்பதிந்து விட்டது: நீங்கள் இறப்பது முன்னாலேயே தெரிந்து விடும்போது இழப்பதற்கு இனி ஒன்றுமே இல்லை என்பது புரிந்து விடுகிறது. நிர்வாணமாக இருப்பதைப் போல் உணர்கிறோம்...

உங்கள் வாழ்க்கை மிகச்சிறியது. உங்களுக்காவே அதை வாழுங்கள். துருப்பிடித்த சித்தாந்தங்களுக்காக வாழ்க்கையை வீணாக்காதீர்க். அடுத்தவர்களின் கருத்துச் சத்தங்கள் உங்கள் உள்ளுணர்வின் சத்தை நீர்த்துப் போகச் செய்ய அனுமதிக்காதீர்கள். முட்டாள்தினத்திலிருந்துதான் புத்திசாலித்தனம் பிறக்கிறது. அதனால் எப்போதும் பசியோடு இருங்கள். எப்போதும் முட்டாளாக இருங்கள். உங்கள் இதயமும் உள்ளுணர்வும்உங்களை வழி நடத்தட்டும்.



- கிருஷ்ணா டாவின்ஸி

Saturday, September 24, 2011

facebook இவ்வாரம் வெளியிட்ட 5 முக்கியமான புதிய மாற்றங்கள்!

Facebook ஸ்தாபகர் Mark Zukerberg கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்த facebook இன் வரலாற்றிலேயே மிகவும் முக்கியமான புதிய மாற்றங்களை ஒரே பார்வையில் இங்கு தருகிறோம்.

1 – Timeline – இது உங்களைப்பற்றிய ஒரு தகவல் ஓடையாகும். இது புகைப்படங்கள் மற்றும் ஏனைய பதிவுகள் அனைத்தையும் கொண்டிருக்கும். இல் இணைந்ததிலிருந்து ஒவ்வொரு வருடமாக உங்களின் வாழ்க்கையை நீங்கள் பார்க்கலாம்.

2 – Facebook Gestures – இது நீங்கள் செய்யும் அனைத்து விடயங்களையும் உங்கள் நண்பர்களுக்கு இலகுவாக வெளிப்படுத்தும் வசதியாகும். இதன்மூலம் அதிகளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும்.

3 - உங்களைப்பற்றிய தகவல்களை பயன்பாட்டாளர்கள் உங்கள் கணக்கில் பகிர்ந்துகொள்வதற்கு ஒரே தடவையில் அனுமதியைப்பெறும் முறை. இதன்மூலம் ஒவ்வொருமுறையும் அனுமதிபெறத்தேவையில்லை. இதனால் உங்கள் செய்தியோடை நிரம்பிவிடுமென அஞ்சத்தேவையில்லை.

4 – உங்களினதும் உங்களின் நண்பர்களினதும் முக்கியத்துவம் குறைந்த நடவடிக்கைகள் Ticker எனப்படும் பகுதிக்கு தானாகவே மாற்றப்படும்.

5 - facebook இலிருந்தவாறே பாடல்கள் திரைப்படங்கள் மற்றும் செய்திகளை பார்த்தும் கேட்டும் அனுபவிக்க முடியும். உங்கள் நண்பர்கள் பார்வையிடும் திரைப்படங்கள் முதலானவற்றை facebook இன் Ticker உங்களுக்கு அறிவிக்கும். நண்பர்களுடன் இணைந்து பாடல் கேட்கலாம். facebook பாவனையாளர்களின் எண்ணிக்கை என்றுமில்லாதவாறு 800 மில்லியனை தாண்டியுள்ளது. ஒரே நாளில் 500 மில்லியன் பேர் facebook ஐ பார்வையிட்ட சாதனையும் நிலைநாட்டப்பட்டுள்ளது.

Thursday, September 22, 2011

கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த..

"இன்ஸ்டால் செய்து, சில மாதங்கள் நன்றாக, வேகமாக வேலை செய்தது. இப்போது என்ன செய்தாலும், கொஞ்ச நேரம் எடுத்த பின்னரே, வேலையைத் தொடங்குகிறது'' என்ற குற்றச் சாட்டினைக் கம்ப்யூட்டர் புதியதாய் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியவர்களிடம் கேட்கலாம். இங்கு எது சரி அல்லது எது உதவியாய் இல்லை என்று பகுத்தறிவது எளிதல்ல. இருப்பினும், உங்கள் கம்ப்யூட்டருக்கு உரமூட்ட, அதனைத் தொடர்ந்து வேகமாக இயங்க வைத்திட சில எளிய வழிகளைக் காணலாம். அதற்கு இலவசமாய் உதவிடும் சில சாதனங்களையும் பார்க்கலாம்.

1. கெடுதல் புரோகிராம்களை நீக்குக: புதிய கம்ப்யூட்டர்களில், மால்வேர் (Malware) எனப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் இருப்பதில்லை. ஆனால் பயன்படுத்தத் தொடங்கிய சில மாதங்களில், இவை உங்கள் கம்ப்யூட்டரை அடைந் திருக்கும். சில நாட்களாக, கம்ப்யூட்டர் இயங்குவது தாமதமாகிறது என்ற குற்றச்சாட்டு இருந்தால், அதில் மால்வேர் இடம் பிடித்துள்ளது என்று சொல்லலாம். ஒரு மால்வேர் கம்ப்யூட்டர் ஒன்றில் திருட்டுத் தனமாக நுழைந்திட பல்லாயிரம் வழிகள் உள்ளன. அனைத்தையும் அடைத்து வைப்பது அவ்வளவு எளிதல்ல. கம்ப்யூட்டர் இயக்கத்தின் பின்னணியில் அமர்ந்து இயங்கிக் கொண்டு, ஸ்பேம் எனப்படும் இமெயில்களை உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து அனுப்பலாம்; உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தவாறே, தொடர்ந்து பரவ அடுத்த கம்ப்யூட்டர்களைத் தேடலாம்; நாம் அமைத்துள்ள தந்திர சுருக்கு வழிகளைக் கண்டறியலாம் மற்றும் ஹேக்கர்கள் விரும்பும் பல கெடுக்கும் செயல்களில் ஈடுபடலாம். தான் மட்டும் தனியாக இடம் பிடிக்காமல், தன்னுடன் சில வைரஸ்களையும் அழைத்து வந்து இடம் பிடிக்கும் மால்வேர் புரோகிராம்களும் உண்டு. இதனைக் கண்டறிய நீங்கள் உடனடியாகப் பயன்படுத்த வேண்டியது வைரஸ் ஸ்கேன் புரோகிராம் ஆகும். கண்டறிந்து நீக்கக் கூடிய ஸ்கேனர்களைப் பயன்படுத்தவும்.

2. வீடியோ கார்டை மேம்படுத்துக: உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வீடியோ கார்ட், தன்னிடம் வரும் சுமையை ஏற்றுச் செயல்படும் அளவிற்குத் திறன் குறைந்த தாக இருந்தால், நிச்சயம் கம்ப்யூட்டர் செயல்பாட்டின் வேகம் குறையும். குறிப்பாக, கேம்ஸ் விளையாடுபவர்கள், கிராபிக்ஸ் புரோகிராம் இயக்குபவர்களுக்கு இது நேரலாம். இவர்கள் தங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வீடியோ கார்டினைக் கூடுதல் திறனுக்கு உயர்த்த வேண்டும்; அல்லது இரண்டாவதாக ஒன்றை இணைக்க வேண்டும்.

3. வேகமாக இயங்கும் ட்ரைவ் தேவை: பல வேலைகளில், கம்ப்யூட்டர் மெதுவாக இயங்குவதற்குக் காரணம் அதில் இணைக்கப்பட்டுள்ள ஹார்ட் டிஸ்க்குகளே. ஒரு ட்ரைவின் சில அம்சங்கள் – RPMs, cache size, seek speed, and transfer rate– அதன் செயல் வேகத்தைக் காட்டும். இவற்றின் மூலம் வேகமாக இயங்கக் கூடிய ஹார்ட் டிஸ்க் கினை வாங்கி இணைக்கலாம். அல்லது ஹார்ட் டிஸ்க்கின் செயல் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் செட்டிங்ஸ் அமைத்திருந்தால் அவற்றை மாற்றலாம்.

4. பிரச்னைகளுக்குத் தீர்வு காணல்: ஒரு சிஸ்டம் மெதுவாக இயங்குகிறது என்பது அதன் ஹார்ட்வேர் பிரச்னையாகும். எடுத்துக்காட்டாக, கம்ப்யூட்டரின் சி.பி.யு. விலிருந்து உண்டாகும் வெப்பம் தணிக்கப் பட்டு, குளிர்வாக இல்லை என்றால், சிஸ்டம் செயல்படும் வேகம் குறையலாம். அதே போல, டிஸ்க்குகளில் ஏற்படும் தீர்க்கப்படக் கூடிய பிழைகள் (Recoverable errors) அந்த டிஸ்க் பயனற்றது எனக் காட்டாமல் இருக்கும். அதே போல, ஹார்ட் டிஸ்க்குகளில் பதியப்படும் பல்வேறு ட்ரைவர் புரோகிராம் கள், குறிப்பாக வீடியோ ட்ரைவர் புரோகிராம்கள், கம்ப்யூட்டரின் செயல்பாடு வேகத்தைக் குறைக்கும். சிபியு வேக சோதனை, பல்வேறு துணை சாதனங்களில் ஏற்படும் வெப்ப சோதனை, ஹார்ட் ட்ரைவர் பிழைகள் சோதனை, ட்ரைவர் புரோகிராம்களை மேம்படுத்துதல் ஆகிய செயல் முறைகள், கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கும் பிரச்னையைத் தீர்க்கும்.

5. பிரவுசரை மாற்றுக: பிரவுசர் இயக்கத்தில் ஒன்றும் ரகசியம் இல்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையிலும், வேகத்திலும் இயங்கக் கூடியவையே. பழக்கம் காரணமாக, நீங்கள் ஒரே பிரவுசரை இயக்கிக் கொண்டிருந்தால், இன்னொரு பிரவுசரை இயக்கி, அப்போது கம்ப்யூட்டர் எப்படி இயங்குகிறது என்று கவனிக்கவும். பலரின் கணிப்பில், குரோம் பிரவுசர் வேகமாக இயங்குகிறது. இதனை இதுவரை பயன் படுத்தாதவர்கள், பயன்படுத்திப் பார்க்கலாம்.

6. குப்பையை அகற்றுக: கம்ப்யூட்டரில் குப்பை போல புரோகிராம்களையும் பைல் களையும் குவித்து வைப்பது, கம்ப்யூட்டரின் செயல் வேகத்தினைக் குறைக்கும். உதவிடும் புரோகிராம்கள், டூல்பார்கள், ஆட் ஆன் தொகுப்புகள் எனப் பல புரோகிராம்களை நாம் நம் கம்ப்யூட்டரில் தேக்கி வைக்கிறோம். இவற்றில் சில, கம்ப்யூட்டர் இயங்கும்போதே, இயக்கப்பட்டு பின்னணியில் தொடர்ந்து நாம் அறியாமலேயே இயங்கிக் கொண்டிருக்கும். இவற்றை நீக்க வேண்டும். விண்டோஸ் சிஸ்டம் வழங்கும் தேவைப்படாத பயன்பாட்டு புரோகிராம்கள், கம்ப்யூட்டர் தயாரித்த நிறுவனம் வழங்கிய புரோகிராம்கள், பிரவுசர் ப்ளக் இன் புரோகிராம்கள், நீக்கிய புரோகிராம்களின் தொடர்பு பைல்கள் என இவற்றைக் கண்டறிந்து நீக்க வேண்டும்.

7. டிபிராக் செய்தல்: கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவினை டிபிராக் (Defrag) செய்தல் (சிதறிய நிலையில் பதியப் பட்டுள்ள பைல்களை, ஓரிடத்திலேயே இணைந்து இருக்கும்படி அமைத்தல்), கம்ப்யூட்டரின் செயல் வேகத்தினை நிச்சயம் அதிகப்படுத்தும். குறிப்பிட்ட கால இடைவெளியில் இதனை அவசியம் மேற்கொள்ள வேண்டும். இதற்கு உதவிட, விண்டோஸ் சிஸ்டம் தரும் வசதி மட்டுமின்றி, அதிகமான அளவில் தர்ட் பார்ட்டி புரோகிராம்கள், இணையத்தில் கிடைக்கின்றன.மேலே தரப்பட்டுள்ள காரணங்களுடன் இன்னும் பல காரணங்களினால், கம்ப்யூட்டர் செயல்படும் வேகம் குறையலாம். இருப்பினும், மேலே பரிந்துரைக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டால், நிச்சயம் கம்ப்யூட்டரின் வேகம் அதிகமாகும்.

Monday, September 12, 2011

வளர்ந்து வரும் லினக்ஸ் சாம்ராஜ்யம் !!

இருபது ஆண்டுகளுக்கு முன்னால், லினஸ் டோர்வால்ட்ஸ் தன்னுடைய புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் திட்டம் குறித்து, யூசர்நெட் என்ற அஞ்சல் குழுவில் அறிவித்த போது, அது உலகை வென்று வாகை சூடும் என எண்ணிப் பார்த்திருக்க மாட்டார். 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ல் இது பற்றி எழுதுகையில், சும்மா பொழுது போக்காகத்தான் இதனை உருவாக்குகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். 80386 ப்ராசசர் இயக்கம் பற்றித் தெரிந்து கொள்வதற்காகத்தான், லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வடிவமைத் ததாகவும் பின் நாளில் எழுதினார். ஆனால் நடந்தது வேறு. இன்று புதியதாக உருவாகும் அனைத்து ப்ராசசர்களும் லினக்ஸ் இயங்கும் வகையிலேயே அமைக்கப்படுகின்றன. லினக்ஸ் எந்த வகைக் கம்ப்யூட்டரையும், பெர்சனல் கம்ப்யூட்டர், நெட்புக், ஸ்மார்ட்போன் முதல் மெயின்பிரேம் வரை, மற்றும் பிற, என அனைத்து வகை கம்ப்யூட்டிங் பணிகளையும் எளிதாகவும், விரை வாகவும் மேற்கொள்ள உதவிடும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இன்று உருவெடுத்துள்ளது. டெல், எச்.பி. ஆரக்கிள், ஐ.பி.எம். என அனைத்து முன்னணி பெர்சனல் கம்ப்யூட்டர் நிறுவனங்களும் லினக்ஸ் சிஸ்டத்திற்குத் தொடக்கம் முதல் ஆதரவு அளித்தன. வர்த்தக ரீதியாக லினக்ஸ் சிஸ்டத்தினை எடுத்துக் கொண்ட ரெட் ஹேட் (Red Hat) நிறுவனம், இன்று 730 கோடி டாலர் மதிப்புள்ள நிறுவனமாக இயங்கி வருகிறது.

லினக்ஸ் பெற்றுள்ள இந்த வெற்றி எளிதாக அதற்குக் கிடைக்கவில்லை. அது கடந்து வந்த பாதை முட்களும் தடைகளும் நிறைந்ததாகவே இருந்தது. மைக்ரோசாப்ட் இதற்கு முதல் எதிரியாக இருந்தது. தொழில் நுட்ப ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் பல தொல்லைகளை மைக்ரோசாப்ட் தந்தது. அனைத்தையும் லினக்ஸ் சமாளித்து முன்னேறியது.இன்று கம்ப்யூட்டர் உலகில் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த மாற்றத்தில் லினக்ஸ் சிஸ்டம் சில நன்மைகளைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் மாற்றத்திற்கும் உதவி வருகிறது.

1. லினக்ஸ் எளிமை: லினக்ஸ் சிஸ்டம் தந்த இயக்கச் சூழ்நிலை, யூனிக்ஸ் இயக்கத்தினைப் பின்பற்றியே இருப்பதாக முதலில் குற்றம் சாட்டப் பட்டது. ஆனால், லினக்ஸ் அதன் தொடக்கத்தில் இருந்தே, புதிய கண்டுபிடிப்புடன் கூடிய நவீன தொழில் நுட்பம் தருவதாகவே அமைந்தது. வர்த்தக ரீதியாக யூனிக்ஸ் தொழில் நுட்பம், மிகவும் விலை உயர்ந்த ப்ராசசர்களில் மட்டுமே இயங்கியபோது, லினக்ஸ் வடிவமைத்த டோர்வால்ட்ஸ், லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, மிகவும் விலை மலிவானதாக து86 ப்ராசசர்களில் இயங்க வைத்தார்.

2. அனைவருக்கும் சொந்தம்:லினக்ஸ் தொகுப்பின் இந்த வளர்ச்சி இன்டர்நெட் பயன்பாட்டின் மூலமே ஏற்பட்டது என்றால், அது மிகையாகாது. லினக்ஸ் கட்டமைப்பினை யார் வேண்டு மானாலும் திருத்தி அமைக்கும் வகையில் ஒரு திறந்த ஊற்றாகவே உள்ளது. உலகின் பெரிய வெற்றி பெற்ற ஓப்பன் சோர்ஸ் திட்டம் இதுவாகத்தான் இருக்கும். லினக்ஸ் இந்த உலகின் எண்ணிக்கை யிலடங்காத புரோகிராமர்களின் பங்களிப்பினால் உருவாகியுள்ளது; தொடர்ந்து உருவாகி வருகிறது. யார் வேண்டுமானாலும் இதன் குறியீடுகளைத்தரவிறக்கம் செய்திடலாம்; சோதனை செய்து பார்க்கலாம்; இதிலிருந்து கற்றுக் கொள்ளலாம்; மாற்றி அமைக்கலாம். இதற்கு எந்த கட்டணமும் இல்லை. தனிநபர் புரோகிராமர்கள் மட்டுமின்றி, நிறுவனங்களும் இதன் லினக்ஸ் கட்டமைப்பினை வளர்ப்ப திலும், மாற்றி அமைப்பதிலும் பங்களித்துள்ளன.

3.இன்டர்நெட் இணைந்து வளர்ச்சி: லினக்ஸ் வளர்ச்சி அடைய இன்டர்நெட் ஒரு கருவியாய் இருந்து உதவியதுபோல, இன்டர்நெட் வளர்ச்சி அடையவும் லினக்ஸ் உதவியாய் இருந்து வருகிறது. லினக்ஸில் இயங்கும் வெப் சர்வர்கள், இமெயில் சர்வர்கள், பைல் சர்வர்கள், டேட்டா பேஸ் அமைப்புகள் மற்றும் பல சாதனங்கள் இன்டர்நெட்டினை இயக்க உதவுகின்றன. லினக்ஸ் அமைப்பின் இயக்குநர் கூறியபடி, நீங்கள் எப்போ தெல்லாம் இன்டர்நெட்டினைப் பயன்படுத்துகிறீர்களோ, அப்போ தெல்லாம் லினக்ஸ் சிஸ்டத்தையும் பயன் படுத்துகிறீர்கள். எடுத்துக் காட்டாக, கூகுள் தேடல் சாதனங்களைப் பயன் படுத்தாதவர்கள் இருக்க முடியாது. கூகுளின் தேடல் சாதனங்கள் அனைத்தும் லினக்ஸ் சிஸ்டத்தில் தான் இயங்குகின்றன. யாஹூவின் பெரும் பாலான சர்வர்களும் அவ்வாறே இயங்குகின்றன

4. டெஸ்க்டாப் லினக்ஸ்: டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் லினக்ஸ் பயன்பாடு மிக மிகக் குறைவே. டேட்டா மையங்களிலும் இணைய சர்வர்களிலும் லினக்ஸ் அதிகம் பயன்பட்டாலும், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் இதன் பயன்பாடு சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை. மொத்தத்தில் 1% கூட இது இல்லை. சில நிறுவனங்கள் தங்கள் கம்ப்யூட்டர் களில் லினக்ஸ் தொகுப்பைப் பதிந்தே விற்பனை செய்தாலும், அதனைத் தொடர்ந்து பயன்படுத்துபவர் எண்ணிக்கை மிகவும் குறைவே. லினக்ஸ் சிஸ்டத்தினால், விண்டோஸ் சிஸ்டம் பெற்றுள்ள இடத்தினை சிறிது கூட அசைக்க முடியவில்லை. ஆனால் பல நாடுகளில், அரசு அலுவலகங் களில், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் லினக்ஸ் பயன்பாட்டினைக் காண முடிகிறது. இதற்குக் காரணம் தங்கள் அலுவலர் களின் கம்ப்யூட்டர் பயன்பாட்டினைக் கட்டுப்பாட்டில் கொள்ள, நிர்வாகத்திற்கு லினக்ஸ் உதவுகிறது. மேலும் லினக்ஸ் இலவசம் என்பதால், செலவு குறைகிறது. இந்த வகையில் உபுண்டு லினக்ஸ் (Ubuntu Linux) டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் பிரபலமாக இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக உள்ளது. வரும் 2015 ஆம் ஆண்டில், இது 20 கோடி டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் இடம் பெறும் என்று இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

5. மாறிவரும் சூழ்நிலைக்கு லினக்ஸ்: கம்ப்யூட்டர் பயன்பாட்டு வகையானது முற்றிலுமாக மாறி வருகிறது. பாரம்பரிய டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் பயன் பாட்டினை விட்டுவிட்டு, புதிய சாதனங்களுக்கு மக்கள் மாறி வருகின்றனர். எடுத்துக்காட்டாக, ஜப்பானில் 50% மின்னஞ்சல்கள், மொபைல் போன் மூலமே அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த வழக்கம், ஐரோப்பியா மற்றும் பிற ஆசிய நாடுகளிலும் பரவி வருகிறது. அமெரிக்காவில் விற்பனையாகும் ஸ்மார்ட் போன்களில் பெரும்பாலானவற்றில், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன் படுத்தப்படுகிறது. ஆண்ட்ராய்ட், லினக்ஸ் கெர்னலை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும்.

6. மைக்ரோசாப்ட் எதிரியா? லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தன் வருமானத்தைக் குறைக்கும் எதிரியாக, மைக்ரோசாப்ட் தொடக்கத்தில் கருதி யதாக நமக்குத் தகவல்கள் கிடைத்தன. ஆனால் பின்னர், மைக்ரோசாப்ட் சுசி லினக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, லினக்ஸ் உரிமங்களை வாங்கி, தன் வாடிக்கையாளர்களுக்கு மறு விற்பனை செய்தது. தொடர்ந்து இந்த விற்பனை ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. லினக்ஸ் தற்போது வெற்றி பெற் றுள்ள, அதிகப் பயனுள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் என உறுதியான பெயரைப் பெற்றுவிட்டது. இனி, இந்த நல்ல பெயரினைத் தொடர்ந்து பாதுகாப்பதே, லினக்ஸ் வழங்கும் நிறுவனங்களுக்குள்ள சவாலாகும்.

Thursday, September 8, 2011

ஒரு முன்னால் மாணவனின் கடிதம்!!

இன்ஜினியரிங் பட்டம் பெற்றால், நிச்சயம் வேலை என்ற நிலை மாறி விட்டது. பல பொறியியல் பட்டதாரிகள், தம் படிப்புக்குத் தொடர்பில்லாத, "மார்க்கெட்டிங்' பிரிவுகளில் பணியாற்றுகின்றனர்; பலர் வேலையில்லாமல் இருக்கின்றனர். இதே நிலை, கம்ப்யூட்டர் படிப்பு முடித்தவர்களுக்கும் வந்து விட்டது.மருத்துவப் படிப்போ கேட்கவே வேண்டாம். சாதாரண நிலையில் அதிகம் பெயர் பெறாத மருத்துவக் கல்லுரிகளில், ஒரு சீட்டின் விலை, 20 - 25 லட்ச ரூபாயும், பெயர் பெற்ற கல்லூரிகளில், 60 லட்ச ரூபாயும் போகிறது. இது போக ஐந்து வருட படிப்பிற்கு, வருடம் இரண்டு லட்ச ரூபாய் வீதம், 10 லட்ச ரூபாய் செலவாகும். வெறும் எம்.பி.பி.எஸ்.,க்கு இன்று மதிப்பில்லை; எம்.எஸ்.,ஸோ, எம்.டி.,யோ முடிக்க வேண்டும். அதற்கு, 30 லட்ச ரூபாய் குறைந்தபட்சமாகத் தேவை.ஆக, சாதாரண மருத்துவக் கல்லூரியில், ஏழு வருடங்கள் படித்து, முழுமையான ஒரு டாக்டராக வெளி வர, 70 - 75 லட்சம் ரூபாய் தேவை.சரி... செலவு செய்தாயிற்று... என்ன சம்பளம் கிடைக்கும்? அரசாங்க வேலை வேண்டாம்... புது வரவுகளுக்கு, தனியாரிடம் என்ன சம்பளம் கிடைக்கும்? 5,000 - 6,000 ரூபாய் - சென்னை நிலவரப் படி கிடைக்கிறது! 40 வயது ஆகும் போது தான், ஒரு டாக்டரால் நாலு காசு பார்க்க முடிகிறது!இதுவே, போட்டியில்லாத கிராமப்புறத்தில் ஒரு, "ஷட்டர் கிளினிக்' (10 அடிக்கு, 10 அடி இடம்) போட்டால், 20 - 30 ஆயிரம் ரூபாயை எம்.பி. பி.எஸ்., டாக்டர் கூட சம்பாதிக்க முடியும் - ஆனால், கிராமத்தில் பணியாற்ற, 95 சதவீதத்தினர் விரும்புவதில்லையே! போகட்டும் — கம்ப்யூட்டர் தொடர்புடைய படிப்புகள் படித்தவர்களுக்கு உடனடி வேலை... உள்நாட்டில் என்றால், 20 - 30 ஆயிரம் ரூபாய் சம்பளம்... வெளிநாடுகளில் வேலை கிடைத்து விட்டாலோ மாதம், இரண்டு லட்சம் ரூபாய் என்ற நிலையும் மாறி விட்டது. கம்ப்யூட்டர் படித்தவர்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாகி வருகிறது... அப்படியே கிடைத்தாலும் 3,000 - 3,500 ரூபாய்க்கு, குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் வேலை பார்க்கும் நிலை உள்ளது.நிலைமை இப்படி மோசமாக இருக்க, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கயவர்கள் கூட்டமும் பெருகி வருகிறது.காசைக் கொட்டி, மூளையைத் தீட்டி, கஷ்டப்பட்டு படித்து, வெற்றி வாகை சூடிய இளைஞர்களை, அதைரியப்படுத்தும் விதமாக இதை எழுதவில்லை... "எப்படியாவது வேலை கிடைத்தால் போதும்...' என்ற எண்ணத்தில் ஏமாறாமல், எச்சரிக்கையாக இருக்கவே எழுதுகிறேன்...சென்னையில் தங்கி வேலை தேடி வரும் கிராமத்து பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் எழுதிய எச்சரிக்கைக் கடிதம் இது... படியுங்கள்...



என் பெயர் ராஜன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது!) நான் கிளின்டன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது!) பொறியியல் கல்லூரியில் பி.இ., முடித்துள்ளேன். என்னைப் போன்ற படித்து முடித்து வரும் இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி, அவர்களை ஏமாற்றும் போலியான, "கன்சல்டன்சி' அமைப்புகளைப் பற்றி தங்கள் மூலம் இளைஞர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். தற்போது சென்னையில் தங்கி, வேலை தேடி வருகிறேன். கடந்த, நான்கு மாதங்களுக்கு முன், கோவையில் உள்ள ஒரு கன்சல்டன்சியின் விளம்பரம், நாளிதழ் ஒன்றில் வெளியாகி இருந்தது; நான் விண்ணப்பித்து இருந்தேன். ஒரு வாரத்தில் அவர்களிடம் இருந்து பதில் வந்தது. அதில், ஐநூறு ரூபாய் மற்றும் சான்றிதழ் நகல்களை நேரிலோ அல்லது மணியார்டர், தபாலிலோ அனுப்பும்படி இருந்தது.ஆனால், என் நண்பர்கள் சிலர், "இது ஏதாவது ஏமாற்று வேலையாக இருக்கும்; பணம் அனுப்ப வேண்டாம்...' என்று கூறினர்; அதனால், நான் பணம் அனுப்பவில்லை.

ஆனால், அடுத்த இரண்டு வாரத்தில் மறுபடியும் ஒரு தபால் வந்தது. அதில், என் தகுதிக்கேற்ற வேலை தயாராக இருப்ப தாகவும், 1,950 ரூபாய் நேரில் கொண்டு வரும்படி கேட்டு இருந்தனர்.நான், தொலைபேசியில் அவர்களை தொடர்பு கொண்டேன். கடிதத்தில் உள்ளதையே, தொலைபேசியிலும் கூறினர். பணம் கட்டினால் பெங்களூருவில் ஒரு வாரத்தில் வேலையில் சேர்ந்து விடலாம் என்று கூறினர். வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ள இந்த காலத்தில், இவ்வளவு எளிதாக வேலை கிடைக்கிறதே என்ற எண்ணத்தில், கஷ்டப்பட்டு 2,000 ரூபாயை வீட்டில் வாங்கி, என் கூடப் படித்த நண்பனுடன் கோவை சென்றேன்.அங்கு, 1,950 ரூபாயை வாங்கிக் கொண்டு, ஒரு வாரத்தில் பெங்களூரு அழைத்துச் சென்று வேலையில் சேர்த்து விடுவதாகக் கூறினர். மேலும், என் கூட வந்த நண்பனையும் மூளைச்சலவை செய்து, இருவருக்கும் ஒரே கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்தனர். வேலை பற்றிய கனவுடன் ஊர் திரும்பினோம்.என் நண்பன் பணம் கட்டாததால், அவன் கட்டியவுடன் இருவரையும் சேர்த்து பெங்களூரு அனுப்புவதாக கூறினர். இரண்டு வாரத்திற்குப் பின், நானும், நண்பனும் மறுபடியும் கோவை சென்றோம். என் நண்பனும், 1,950 ரூபாய் கட்டினான். ஒரு வாரத்தில் வேலையில் சேர்வதற்காக உத்தரவு வரும் என்று கூறினர்.கண்டிப்பாக வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டிருந்தோம். இரண்டு, மூன்று வாரங்களாகியும் ஒரு பதிலும் இல்லை. அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, ஒரு வாரம் கழித்து தொடர்பு கொள்ளுமாறு கூறினர். இரண்டு மாதம் சென்றது.


இந்த இரண்டு மாதமும், ஒரு வாரத்திற்கு இரண்டு முறை என் நண்பனும், நானும் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட வண்ணம் இருந்தோம். அவர்களிடம் இருந்து சரியான பதில் இல்லை.நாங்கள் அடிக்கடி தொடர்பு கொண்டதால், அடுத்த மாதம் பெங்களூருவில் உள்ள ஐ.டி.சி.,யில் கால் சென்டருக்கான எழுத்து தேர்வை எழுதுமாறு கூறினர். அதற்கு அவர்களிடம் இருந்து முறையான தகவல் இல்லை. எந்த விதத்தில் அவர்களை நம்பி பெங்களூரு செல்வது என்று தெரியாமல், அவர்களிடம் விசாரித்ததற்கு எரிந்து விழுந்தனர். அந்த தேர்வை எழுதினால் மட்டும் போதும், ஒரு வாரத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினர்.மறுபடியும் நாங்கள் நம்பிக்கை கொண்டு பெங்களூரு சென்றோம். அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது, இந்த, "கன்சல்டன்சி'க்கும், அந்த நிறுவனத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று! அந்த தேர்வை யார் வேண்டுமானாலும் எழுதலாம், தினமும் அந்த தேர்வு நடக்கிறது என்று அங்கு போய் தான் தெரிந்து கொண்டோம்.


பெங்களூருவில் இருந்து கோவையை தொடர்பு கொண்டோம். அதற்கு அவர்கள், எங்களை ஊருக்குப் போக கூறினர். ஒரு வாரத்தில் வேலைக்கான உத்தரவு வரும் என்றனர்; ஆனால், மறுபடியும் நாங்கள் ஏமாந்தோம். மறுபடி, மறுபடி தொடர்பு கொண்டாலும், "ஒரு வாரத்தில் வேலை கிடைத்து விடும்...' என்று சொல்லி தொடர்பை துண்டித்து விட்டனர்.விரக்தியின் உச்சத்தில், நானும், என் நண்பனும் தற்போது சென்னையில் தங்கி வேலை தேடி வருகிறோம். இப்போது தான் இந்த போலியான, "கன்சல்டன்சி' பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நான், என் நண்பன் மட்டுமல்ல... இன்னும் எத்தனையோ இளைஞர்கள் எங்களைப் போல போலியான விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து, பணத்தைத் தொலைத்து விட்டு நிற்கின்றனர். தமிழக அரசு ஏதாவது செய்து, போலி, "கன்சல்டன்சி'க்களுக்கு தடை விதித்தும், "கன்சல்டன்சி'க்களை முறைப்படுத்தியும் இளைஞர்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க வேண்டும்.படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு, இந்த மாதிரி போலியான அமைப்புகளைப் பற்றிய விழிப்புணர்வை நீங்கள் ஏற்படுத்த வேண்டும். இதையும் தங்களின் சேவைகளில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.— "புரொபஷனல் கோர்ஸ்' முடித்த பட்டதாரி இளைஞர்களே... இதைப் படித்த பின்னும் கவனமின்றி செயல்பட்டு, நொந்து போகாதீர்கள்!


- தினமலர்.

Sunday, September 4, 2011

Win மொழி!!

"குருவே நான் அடிக்கடி பதட்டமாகிவிடுகிறேன். அதனால் நிறைய பிரச்னைகள் வருகின்றன'' என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. அப்படியா?''ஆமாம் குருவே பதட்டத்தில் நான் செய்யும் காரியங்கள் எல்லாம் தப்பாக முடிகிறது'' என்று சொன்னம் அவனுடைய பிரச்னை குருவுக்குப் புரிந்தது.

அவனுக்கு ஒரு கதையைச் சொல்ல ஆரம்பிஞூததார்.""இது புத்தர் வாழ்க்கையியில் நடந்தது. ஒரு முறை புத்தரும் அவரது சீடர்களும் ஒரு கிராமத்தைக் கடந்து கொண்டிருந்தார்கள். அப்போது புத்தருக்கு தண்ணீர் தாகம். ஒரு சீடனிடம் தண்ணீர் கேட்டார். அவன் தண்ணீர் எடுத்து வர அருகிலுள்ள குளத்துக்கு ஓடினான். அங்கே குளக்கரையில் கிரமாத்துவாசிகள் துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள். அதனால் குளம் கலங்கித இருந்தது. அதிலிருந்து தண்ணீர் எடுத்துப் போய் கொடுக்க சீடனுக்கு மனமில்லை. ஓடி வந்து புத்தரிடம் பார்த்ததைச் சொன்னான். உடனே புத்தர், பராவயில்லை சிறிது நேரம் கழித்துப்போய் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லி அங்கிருந்த மர நிழலில் அமர்ந்து கொண்டார்.
ஒரு மணி நேரம் கடந்திருக்கும். புத்தர் சீடனை அழைத்து மீண்டும் குளத்துச் சென்று தண்ணீர் எடுத்துவரச் சொன்னார். சீடனும் குளத்துக்குச் சென்றான். குளக்கரை காலியாக இருந்தது. கிரமாத்துவாசிகள் துவைத்து முடித்து சென்றியிருந்தார்கள். குளத்தின் காலங்கலும் அடங்கி தண்ணீர் தெளிந்து இருந்தது. சீடன் தெளிந்த தண்ணீரை எடுத்துக் கொண்டு புத்தரிடம் சென்றான்.ஒரு மணிநேரம் முன்பு பார்த்த குளம் போலவே இல்லை, மிகவும் தெளிந்து இருந்தது என்றான் குருவிடம். அதற்கு புத்தர் அவனிடம் மனித மனமும் இப்படித்தான். பதட்டத்தில் இருக்கும்போது கலங்கியிருக்கும். அந்த நேரம் நாம் எந்தக் காரியும் செய்யக் கூடாது. சிறிது நேரம் அமைதியாக இருந்தால் மனம் தெளிவடையும். அப்போதுதான் நம் பணிகளைச் செய்ய வேண்டும்' என்றார்.

இந்த சம்பவத்தை குரு சொன்னதும் வந்தவனுக்கு தன்னுடைய பிரச்னை என்னவென்று புரிந்து. அப்போது குரு அவனுக்கு சொன்ன WIN மொழி

பதறாமல் செய்யும் காரியம் சிதறாது!


- kumutham....


Tuesday, August 23, 2011

வௌவால் எப்படி இரவில் பறக்கிறது?

டொனால்டு ஆர்.கிரிப்பின், ராபர்ட் கேலம்போஸ் என்ற இரு விலங்கியல் ஆய்வாளர்களுக்கு நீண்ட நாட்களாய் ஒரு சந்தேகம் இருந்து வந்தது. “கும்மிருட்டில் கூட எப்படி வௌவால்கள் எதிலும் மோதிக்கொள்ளாமல் பறக்கின்றன?” என்பதுதான் அவர்களின் சந்தேகம்.

இதனை எப்படி அறிந்து கொள்வதென்று பல்வேறு யோசனைகள் செய்து இறுதியாய் ஒரு குறிப்பிட்ட முறையில் ஆய்வை செய்து பார்ப்பதென முடிவு செய்தனர். ஓர் இருட்டறையில் குறுக்கும் நெடுக்குமாக மிகவும் மெல்லிய கம்பிகளைக் கட்டிவிட்டனர். பிறகு சில வௌவால்களை பிடித்து அந்த அறையிலே பறக்க விட்டனர். அவை கம்பிகளின் மேல் மோதாமல் பறந்தன.

ஆச்சரியமடைந்த விஞ்ஞானிகள் வௌவால்கள் எப்படி கம்பிகளின் மேல் மோதாமல் பறக்கின்றன என்று குழம்பிப் போயினர். பின்னர் அந்த வௌவால்களை பிடித்து அவற்றின் கண்களை மூடிவைத்து பறக்கவிட்டனர். இப்போதும் அவை கம்பிகளின் மேல் மோதாமல் பறந்தன.

வியப்பின் எல்லைக்கே போன அந்த ஆராய்ச்சியாளர்கள், வௌவால்கள் கண்களின் உதவியால் பறக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டனர். அதன்பின்னர் வௌவால்களின் வாய்களைக் கட்டிப் பறக்கவிட்டனர். அப்போது அவை கம்பிகளின் மேல் மோதிக் கொண்டன.

அடுத்ததாய் அவற்றின் செவிகளை அடைத்து பறக்க விட்டபோதும் அவை கம்பிகளில் மோதிக் கொண்டன. அப்போதுதான் வௌவால்கள் தாம் வெளியிடும் ஒலியின் எதிரொலியைக் கேட்டவாறே அதற்கேற்றாற்போல் பறக்கின்றன என்பதைக் கண்டுபிடித்தனர்.

Friday, August 19, 2011

வெற்றிக்கு ஒரு புத்தகம் - சந்தோஷ வழி...

வெற்றியைத் தேட ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. சந்தோஷத்தை எங்கே போய்த் தேடுவது? அது உள்ளுக்குள்ளிருந்து மலரவேண்டிய விஷயம் இல்லையா? நாமாக நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வழி(கள்) ஏதேனும் உண்டா?
இந்த கேள்விகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பிரபலமான புத்தகம் "The way to happiness " இங்கிலாந்தைச் சேர்ந்த ரான் ஹப்பார்ட் என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் இன்றுவரை பல லட்சம் பிரதிகள் வெளியாகியுள்ளது. 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
"The way to happiness ' புத்தகத்தின் ஸ்பெஷாலிட்டி, இதில் விரிவாக்கப்பட்டுள்ள 21 வழிமுறைகள். "இவற்றை உணர்ந்து பின்பற்றத் தொடங்குவதுதான் உண்மையான சந்தோஷத்துக்கான அடித்தளம்' என்று ஆசிரியர் ரான் ஹப்பார்ட் அடித்துச் சொல்கிறார்.
"சந்தோஷத்தின் வழி'யாக அவர் முன்வைக்கும் அந்த எளிய சூத்திரங்கள், இங்கே சுருக்கமாக:

1. முதலில், உடம்பைப் பார்த்துக்கோங்க, சுவர் இருந்தால்தான் சித்திரம்.

2. உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள், பின்விளைவுகளை யோசித்து மனசைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள்.

3. உங்களுடைய உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, பிஸினஸ் கூட்டாளிகளுக்கு விசுவாசமாக இருங்கள்.

4. உங்கள் வயசு எதுவானாலும் பரவாயில்லை, குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்.

5. பெற்றோரை மதியுங்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள்.

6. "அடுத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல முன் உதாரணமாகத் திகழ்வேன்' என்று உங்களுக்கு நீங்களே உறுதி சொல்லிக் கொள்ளுங்கள்.

7. உண்மை எத்தனை கசப்பானாலும் பரவாயில்லை, ஏற்றுக்கொள்ளுங்கள்.

8. யாரையும் கொல்லாதீர்கள், வார்த்தைகளால்கூட!

9. சட்டவிரோதமான எதையும் செய்யாதீர்கள், அதனால் எத்தனை லாபம் வந்தாலும் சரி!

10. பாரபட்சமின்றி சமூகத்தில் ஒரு சமநிலை வருவதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பியுங்கள்.

11. ஒருவர் நல்லது செய்யும் போது, ஏதாவது சொல்லி அவரது முயற்சியைக் கெடுத்துவிடாதீர்கள்.

12. உங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உங்களுடைய பொறுப்பு.

13. திருடாதீர்கள்.

14. எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக இருங்கள்.

15. சொன்ன வாக்கை மீறாதீர்கள்.

16. "சும்மா இருப்பதே சுகம்' என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.

17. கல்வி என்பது முடிவற்றது, எந்நேரமும் மாணவராகவே வாழவேண்டும்!

18. அடுத்தவர்களுடைய மத உணர்வுகளை மதியுங்கள், கேலி செய்யாதீர்கள்.

19. மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்குச் செய்யாதீர்கள்.

20. அதேபோல், அவர்கள் உங்களை எப்படி நடத்தவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியே நீங்ள் அவர்களை நடத்துங்கள்.

21. இந்த உலகம் வளங்களால் நிறைந்தது, அள்ளி எடுத்துக்கொண்டு முன்னேறுங்கள்.


- என் சொக்கன்