Thursday, December 29, 2011

அண்ணா பல்கலைகளை இணைக்க உயர்நிலைக் குழு அமைப்பு.

தமிழகத்தின் 5 அண்ணா தொழில்நுட்ப பல்கலைகள் இணைப்பை கண்காணிக்க, ஒரு உயர்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.ஆறு பேர் கொண்ட இக்குழுவின் தலைவராக, கூடுதல் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் இருப்பார். இதர உறுப்பினர்களாக, உயர்கல்வித் துறையின் முதன்மை செயலர், மாநில நிதித்துறை செலவினங்கள் பிரிவின் செயலர், சட்டத்துறை செயலர், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் மற்றும் உயர்கல்வித் துறையின் இணை செயலாளர் போன்றோர் இடம் பெற்றுள்ளனர். இதுதொடர்பான அரசு ஆணை சில நாட்களுக்கு முன்னர் பிறப்பிக்கப்பட்டது.

சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 இடங்களில் அமைந்திருக்கும் அண்ணா தொழில்நுட்ப பல்கலை அமைப்பை ரத்து செய்யும் ஆணை, கடந்த செப்டம்பர்(2011) மாதமே, அரசு உத்தரவில் இடம்பெற்றாலும், அதற்கான தேதியை அரசு குறிப்பிட வேண்டியிருந்ததால், உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும், இணைப்பு செயல்பாட்டில் பலவிதமான நடைமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டியிருந்தது.

ஏனெனில், சென்னை தவிர்த்த பிற அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் கீழ்வரும் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் கல்வி நிறைவு தொடர்பான ஏற்பாட்டை செய்ய வேண்டியிருந்தது. மேலும், பிற அண்ணா தொழில்நுட்ப பல்கலைகளின் கீழ் இயங்கிய பொறியியல் கல்லூரிகள், மீண்டும் சென்னை அண்ணா பல்கலையுடன் இணைக்கப்பட வேண்டிய நடைமுறைகள் உள்ளன. அதேபோன்று, அந்தந்த பல்கலைக்கழக கல்லூரிகளும், அண்ணா பல்கலைக்கழக கல்லூரியாக மாற்றப்பட வேண்டும்.

இவைத்தவிர, பிற அண்ணா தொழில்நுட்ப பல்கலைகள் மற்றும் பல்கலைக்கழக கல்லூரிகளின் சொத்துக்கள் மற்றும் ஆவணங்களை மாற்றுதல், அங்கே பணிபுரியும் ஊழியர்களின் பணி நிலைகளை மாற்றுதல் போன்ற சிக்கல்களும் உள்ளன. எனவே, முறையான திட்டமிடுதல் மற்றும் சரியான செயல்பாட்டு நடைமுறை போன்றவை இருந்தால்தான், இந்த இணைப்பு நடவடிக்கை வெற்றிகரமாகவும், சிறப்பாகவும் நடைபெறும்.

பொருட்களை இடமாற்றுதல் மட்டுமின்றி, பிராந்திய அலுவலகங்களை நிர்வகிப்பது மற்றும் அதற்கான அதிகாரங்கள் மற்றும் பணிகளை வரையறை செய்வது ஆகியவைக் குறித்தும், தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் இந்தக் குழு முடிவுசெய்ய வேண்டியுள்ளது. மேலும், சொத்துக்கள் பற்றிய விபரங்களைப் பெற, அந்தந்தப் பகுதிகளின் நிதி தணிக்கைத் துறைகளின் உதவியையும் இந்தக் குழு கோரும்.

தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவிற்கு, அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள், ஒரே "சென்னை அண்ணா பல்கலைக்கழகமாக" மாற்றப்படும் வரை, அனைத்துவிதமான நிதி, போக்குவரத்து மற்றும் நிர்வாக உதவிகளை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில், சில வசதிகளைக் கருத்தில்கொண்டு, சென்னை அண்ணா பல்கலைக்கழகம், 5 கல்வி நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டது. அதன்படி, சென்னை தவிர, கோவை, திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி போன்ற இடங்களிலும் அண்ணா தொழில்நுட்ப பல்கலைகள் ஏற்படுத்தப்பட்டு, அதன்கீழ் அப்பகுதியிலிருந்த பொறியியல் கல்லூரிகள் இணைக்கப்பட்டன. ஆனால், கடந்த 2011, மே மாதம், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, பிரிக்கப்பட்ட பல்கலையை, ஒரே "சென்னை அண்ணா பல்கலையாக" மாற்ற முடிவு செய்யப்பட்டு, அதற்கான சட்டமும் வெளியிடப்பட்டது.

இச்சட்டத்திற்கு, தமிழக ஆளுநர் ரோசய்யாவும் ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில், அப்பணிகளை விரைவுபடுத்தவும், முறைப்படுத்தவும் மேலதிகாரிகளைக் கொண்ட இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.


- Kalvimalar

Saturday, December 17, 2011

வெற்றிக்கு ஒரு புத்தகம் - தலைமைக் கண்ணாடி!!!

சச்சின் டெண்டுல்கருக்கும் மகேந்திர சிங் தோனிக்கும் என்ன ஒற்றுமை? என்ன வித்தியாசம்?இருவருமே பிரமாதமான கிரிக்கெட் வீரர்கள், நல்ல திறமைசாலிகள், உலக புகழ் பெற்றவர்கள், ஏகப்பட்ட ரசிகர்களைக் கொண்டவர்கள். ஆனால் ஒரு விஷயத்தில் இவர்கள் இருவரும் வித்தியாசப்படுகிறார்கள்.சச்சின் தன்னுடைய தனித்திறமையை அற்புதமாக வெளிப்படுத்தியதோடு நிறுத்திக் கொண்டுவிட்டார். ஓர் அணியைத் தலைமை தாங்கிப் பலரை அரவணைத்துச் சென்று வெற்றிகளைக் குவிக்கவில்லை. சிறந்த தலைவராகப் பெயர் வாங்கவில்லை.



இந்த விஷயத்தில் தோனி வெகு சமர்த்தர். ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகள், 20:20 போட்டிகள், ஐ.பி.எல். என்று அவர் கை வைத்த இடமெல்லாம் வெற்றி. "எங்க கேப்டன்' என்று பொதுமக்களும் அவரை அன்பாகக் கூப்பிடுகிறார்கள்.கிட்டத்தட்ட இதே கதையை நீங்கள் நிஜ வாழ்க்கையிலும் பார்க்கலாம். சிலர் தங்களுடைய வேலையை மட்டும் மிகச் சிறப்பாகச் செய்வார்கள். வேறு சிலர், மற்றவர்களையும் உடன் அழைத்துச் சென்று சாதிப்பார்கள். இரண்டாவது தரப்பினருக்குத்தான் நிறையப் பாராட்டுகளும் மரியாதையும் சமூக அந்தஸ்தும் சாத்தியப்படும்.அது சரி, இந்த முதல் வகையில் உள்ள அப்பாவிகள் இரண்டாவது வகைக்குத் தாவுவது எப்படி? இந்த ரகசியத்தைச் சொல்லித்தரும் எளிமையான புத்தகம் ஒன்று இப்போதுதான் சுடச்சுட வெளியாகியிருக்கிறது. அதன் பெயர் "தி ஷிஃப்ட் ஃப்ரம் ஒன் டு மெனி'. எழுதியவர் க்ரிஸ்மன் நஃப்சிங்கர்.


நம்மில் பலர் நல்ல தலைவர்களாக ஜொலிக்காமல் இருப்பதற்கு க்ரிஸ்மன் நஃபசிங்கர் சொல்லும் முக்கியமான காரணம், அவர்கள் சரியான நேரத்தில் கண்ணாடியை மாற்றுவதில்லை!கண்ணாடியா? அதென்ன?பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் மூக்குக் கண்ணாடிகளை அணிவது வழக்கம். இந்தக் கண்ணாடிகள்தான் அவர்களுடைய விழித்திரையின் லென்ஸ் பிரச்னைகளை சரி செய்து, பார்ப்பதற்கோ படிப்பதற்கோ வழி செய்கின்றன. ஒருநாள், கண்ணாடியை மறந்து வெளியே சென்றுவிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது இவர்களால் பார்க்க விரும்பிய பொருள்களைப் பார்க்க முடியாது, படிக்க விரும்பிய விஷயங்களைப் படிக்க முடியாது.இதே விஷயம் தலைவர்களுக்கும் பொருந்தும் என்கிறார் க்ரிஸ்மன் நஃப்சிங்கர்.

தனிப்பட்ட முறையில் நல்ல திறமைசாலியாக இருக்கிற ஒருவர் தலைவராக விரும்பினால், மனதளவில் அதற்கென்று ஒரு விசேஷக் கண்ணாடியை அணிய வேண்டும். தங்கள் பார்வையையே மாற்றிக் கொள்ள வேண்டும். அதுவரை தங்களுடைய சொந்தச் செயல்பாடுகள், திறமைகள், தகுதிகள், அனுபவத்தை மட்டும் யோசித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது எல்லோருக்காகவும் சிந்திக்கத் தொடங்க வேண்டும்.அதற்காக இந்தப் புத்தகம் நான்கு ஸ்டெப்களை விளக்கி சொல்கிறது. இவற்றை ஒவ்வொன்றாகக் கடந்து வந்தால், யார் வேண்டுமானாலும் வெற்றிகரமான தலைவராக முடியும்!


Step 1:

நான் என்பதை உணர்வது. அதாவது, என்னுடைய தனிப்பட்ட திறமைகள் என்ன, அவற்றை நான் எப்படிப் பயன்படுத்துகிறேன், எப்படி ஜெயிக்கிறேன் என்பதை உணர்வது. இது நான் எப்போதும் இழக்க மாட்டேன் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வது.


Step 2:


நான் என்பதில் இருந்து மெல்ல நகர்ந்து நாம் என்று நினைக்கத் தொடங்குவது. அதாவது நான் இதைச் செய்தேன் என்று பெருமைப்படுவதற்குப் பதிலாக, அதற்கு மற்றவர்கள் என்ன உதவி செய்தார்கள் என்று யோசிப்பது, அதன்மூலம் நாம் சேர்ந்து இதைச் செஞ்சோம் என உணர்வது.



Step 3:


எல்லாப் பொறுப்புகளையும் நம்மிடம் வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பகிர்ந்து தருவது. அவர்களுடைய வேலையைக் கவனித்து உற்சாகப்படுத்துவது. இதன்மூலம் முதல் ஸ்டெப் (அதாவது நான் என்கிற உணர்வு) மெதுவாக மங்கத் தொடங்கும்.


Step 4:

இந்த நிலையில் நம்முடைய தனிப்பட்ட முக்கியத்துவம் என்பது கிட்டத்தட்ட மறந்தே போயிருக்கும். வெற்றிகரமாகத் தலைமைக் கண்ணாடியை அணிந்து கொண்டிருப்போம். நிரந்தரத் தலைவர்களாக மாறியிருப்போம்!ஒரு நாளும் கண்ணாடியை மறக்காதீர்கள்!




- என். சொக்கன்

Friday, December 16, 2011

இப்படியும் சில விளம்பரங்கள்..!

தமிழில் வெளிவரும் செய்தித்தாள்களை பார்க்கும்போது ஏதோ ஒரு விளம்பர இதழ் போலவே தெரியும். காரணம் முதல் பக்கம் முழுவதும் விளம்பரமாக இருக்கும். சின்ன ஒரு கட்டத்தில் தலைப்பு செய்தியின் இரண்டு பாராக்களை போட்டுவிட்டு தொடர்ச்சி மூன்றாம் பக்கம் பார்க்க என்று போட்டிருப்பார்கள்.

ஆனால் தி ஹிந்து பத்திரிகை தனக்கென்று ஒரு விளம்பரக் கொள்கை வைத்திருக்கிறது. முதல் பக்கத்தினை பொறுத்தவரை கால்பக்கமோ அல்லது அதற்கும் குறைவான அளவிலோ மட்டுமே விளம்பரங்கள் வெளிவரும். காரணம் பேப்பரை பிரித்துப் படிப்பவர்களுக்கு அது செய்தி பத்திரிகையாக காட்சியளிக்க வேண்டும் என்பது தான்.

விளம்பரங்கள் தேவை. ஆனால் வெறும் விளம்பரங்களாக மட்டுமாக மாறிவிடக் கூடாது என்பது அந்நிறுவனத்தின் கொள்கை. அதனாலேயே அதற்கு விளம்பரங்கள் குவிகிறது. இந்தக் கொள்கையை குறித்துவைத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கும் உதவும்.

உங்கள் பேனாகூட விளம்பரம்தான்

என் நண்பர் ஒருவர் பார்க்கர் மட்டுமே பயன் படுத்துவார். அதன் மூலம் தன் அந்தஸ்தைப்பற்றி விளம்பரப்படுத்திக் கொள்வதாக நினைக்கிறார்.

2 ரூபாய் பேனா பயன்படுத்துகிற தேசத்தில் 200 ரூபாய் பேனா பயன்படுத்துகிறார் என்றால் பெரிய ஆள்தான் என்ற எண்ணத்தை பலரின் ஆழ் மனதில் அது ஏற்படுத்திவிடுகிறது.

இன்னுமோர் உதாரணம் பார்க்கலாம்.

பொதுவாக ரெடிமேட் சட்டையில் அதன் பிராண்ட் பெயர், காலரில் பொறிக்கப்பட்டிருக்கும். சில பிராண்டுகளில், அதன் பிராண்ட் சிம்பளை பாக்கெட்டில் எம்ப்ராய்டரி செய்திருப்பார்கள். உதாரணத்திற்கு குரோக்கடைல் சர்ட்டில் முதலையை சின்னதாக எம்ப்ராய்டரி செய்திருப் பார்கள்.

எல்லா நிறுவனங்களும் தன் பிராண்ட் பெயரை சர்ட்டில் உற்றுப்பார்த்தால் தெரியும்படி பதிவு செய்திருப்பார்கள். ஆனால் பேசிக் சர்ட்டில் பேசிக் என்ற அதன் பிராண்ட் லேபிளை காலரில் மட்டும் இல்லாமல் சட்டையின் பட்டன் பகுதியில் எல்லோருக்கும் தெரியும்படி பெரிதாக வைத்திருக்கிறார்கள்.

விசாரித்தபோது பேசிக் ஷோரூம் வைத்திருக்கும் நண்பர் சொன்னார், “பேசிக் போன்ற பிராண்டுகள் எல்லாம் பெருமையின் அடையாளம். பேசிக் அணிந்திருக்கிறேன் என்பதுகூட விளம்பரம்தான்”.

நான் யோசித்தேன். அது பேசிக்கிற்கு விளம்பரமா? இல்லை பேசிக் மூலம் நமக்கு விளம்பரமா? இரண்டும்தான்.

விளம்பரத்தின் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை பயன்படுத்தும்போது, அதுவே கூட நமக்கும் விளம்பரமாக அமைகிறது.

உங்களை விளம்பரம் செய்து உயருங்கள். நீங்கள் உயர்ந்த பின் நீங்கள் எங்கு சென்றாலும் அந்த இடம் விளம்பரமாகும். ரஜினியால் பாபாஜி புகழ் பெற்றதைப்போல…

Tuesday, December 6, 2011

உலகின் சிறந்த ஆசிரியர் பட்டியலில் சூப்பர் 30 நிறுவனர்!

பீகார் மாநிலத்தில் ஐஐடி-ஜேஇஇ தேர்வு எழுதும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கும் வகையில் இயங்கி வரும் சூப்பர் 30 பயிற்சி மையத்தின் நிறுவனரான ஆனந்த் குமார், உலகின் தலை சிறந்த ஆசிரியர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் மோனாகல் என்ற ஆங்கிலப் பத்திரிக்கை மேற்கொண்ட ஆய்வின் இறுதியில் வெளியான உலகின் சிறந்த 20 ஆசிரியர்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து ஆனந்த் குமார் ஒருவரது பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது.


ஏழை மாணவ சமுதாயத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக சேவையாற்றி வருபவர் என்று அவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பாலிவுட் நடிகர்களை விட மிகவும் புகழ்பெற்றவராக ஆனந்த் குமார் உள்ளார் என்றும் பத்திரிகை கூறியுள்ளது.


பீகாரில் உள்ள ஏழை மாணவர்கள் தற்போது ஐஐடியில் படிக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணகர்த்தாவாக ஆனந்த் குமார் உள்ளார். ஐஐடி-ஜேஇஇ தேர்வுகளில் பீகார் மாணவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகளாக முக்கிய இடம் பெறுவது சர்வதேச அளவில் மீடியாக்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.


சூப்பர் 30 பயிற்சி மையம், ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு இலவசமாக தங்குமிடம், உணவு கொடுத்து பயிற்சி அளிக்கிறது. தற்போது சூப்பர் 30 மாணவர்கள் அனைவருமே ஐஐடி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர் என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.


சர்வதேச அளவில் ஆசிரியர்கள் பட்டியலில் இடம்பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கும் ஆனந்த் குமாரை பல்வேறு வெளிநாட்டு மீடியாக்கள் தொடர்பு கொண்டு இலவச பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் பற்றி கருத்துக்களை கேட்டு வருகின்றன.


இவர் தற்போது சர்வதேச அளவில் புகழ் அடையவில்லை. ஏற்கனவே பல வெளிநாட்டு பத்திரிகைகளில் இவரது புகழ் பாடப்பட்டுள்ளது. அவ்வளவு ஏன், இவரது இலவசப் பயிற்சி மையத்தை அடிப்படை கதையாக வைத்து இரண்டு திரைப்படங்கள் கூட வெளியாகி விருதுகளை வென்றுள்ளன.


கேம்பிரிட்ஜ் பல்கலையில் படிக்க வாய்ப்பு கிடைத்தும் ஆனந்த் குமாரால், முழுக் கல்விக் கட்டணத்தையும் செலுத்த வழியில்லாமல் உயர் கல்விக் கனவு தகர்ந்து போனது. அந்த தோல்வியை மற்ற ஏழை மாணவர்களது வெற்றிப் படிகட்டுகளாக மாற்றினார். 2002ம் ஆண்டில் சூப்பர் 30 என்ற இலவச பயிற்சி மையத்தைத் துவக்கினார். 24 மணி நேரத்தில் 16 மணி நேரங்களை கல்விக்காகவே செலவிட்டார். இலவச பயிற்சி மையத்தைத் துவக்கி பல ஏழை மாணவர்களின் சாதனைக்கு துணையாக நிற்கின்றார்.