அந்த நதியின் மேற்பரப்பு பனியால் இறுகியிருந்தது. கால் வைத்துக் கடந்தால் உடைந்து உள்ளே இழுத்துவிடுமோ என்ற தயக்கத்தில் கைகால்களை மண்டியிட்டு தவழ்ந்து அங்குலம் அங்குலமாய் தாண்டிக் கொண்டிருந்தார் ஓர் இளைஞர். ”தள்ளுங்கள்! தள்ளுங்கள்!” என்று குரல் கேட்டது. கையில் இருபது கிலோ எடையுடன் வேக வேகமாய் ஒரு பெரியவர். நதியைத்தாண்டியதும் சொன்னார், ”உறைந்த நதி என்பது ஓடிக் கடக்க ஒரு வாய்ப்பு. நல்ல வாய்ப்புகளை சந்தேகத்துடன் அணுகினால் கடக்க வேண்டிய தூரத்தைக் கடக்காமலேயே போய் விடுவாய்” என்று.
**************************************************************
அக்பரிடம் ஓர் அறிவாளி சவால் விட்டார். “என் வேலைக்காரன் பெருந்தீனிக்காரன்! அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது!” பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார். மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது. மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது. அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார், “அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன். கூண்டின் பூட்டு சரியாக இல்லை என்று சொன்னேன். அச்சம் காரணமாய் ஊட்டச்சத்து உடலில் ஒட்டவில்லை.” அச்சமின்மையே ஆரோக்கியம்!
**************************************************************
டாடா நிறுவனங்களில் ஒன்றாகிய நெல்கோவின் சீரமைப்புக்காக நாசிக் நோக்கி, முதுநிலை மேலாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார் ரத்தன் டாடா. வழியில் காரின் சக்கரம் பழுதடைந்தது. இந்தச் சிறு நிறுத்தம் மேலாளர்களுக்குத் தேவையாய் இருந்தது. சோம்பல் முறிந்து, பேசிச் சிரித்து, பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தவர்கள், ரத்தன்டாடா உடனில்லாததை உணர்ந்து அங்குமிங்கும் தேடினார்கள். தேநீர் பருகப் போனரா ஓய்வெடுக்கப் போனாரா என்றெல்லாம் யோசித்தால், ஓட்டுநர் அருகே சாலையில் மண்டி யிட்டு, சக்கரத்தை மாற்ற உதவிக் கொண்டிருந்தார் ரத்தன் டாடா. நெற்றியில் வியர்வை… இதழ்களில் புன்னகை… நெஞ்சில் மனிதம்!!
பெரிய மனிதர்கள் எளிமையானவர்கள் ,ஒவ்வொரு விதத்திலும் முழுமையானவர்கள்.
**************************************************************
குளத்தில் விழுந்து மிதந்த மலரொன்று அதிலிருந்த மீனிடம் கேட்டது. “சுதந்திரத்துடன் இந்தக் குளத்தில் சுற்றிச் சுற்றி நீந்துகிறாயே, உனக்கு இந்தக் குளம் நிறைய உரிமை கொடுத்திருக்கிறதா?” மீன் சொன்னது. “இந்தக் குளத்திலிருக்கும் அழுக்கையெல்லாம் நான் சுத்தம் செய்கிறேன். அந்த வகையில் இந்தக் குளத்தில் எனக்கு நிறைய கடமை உண்டு. கடமையை செய்பவர்களுக்கே உரிமை அதிகம்” என்றது மீன். சுதந்திரமாய் இயங்க சரியான வழி கடமையைச் செய்வதுதான்.
**************************************************************
பறக்கத் தயங்கும் பறவைகள் இரண்டை, பிரியமுடன் வளர்த்து வந்தார் அந்த அரசர். அவை நன்கு பறக்க வழி செய்பவர்களுக்கு சன்மானம் உண்டென அறிவித்தார். பலரும் பலவிதமாய் முயன்றார்கள். ஒருவர் மட்டும் வெற்றிகரமாய் பறக்கவிட்டார். பறவைகளை கிளையொன்றில் அமரவைத்து கிளைகளை அவர் திடீரென்று வெட்டியதும் பதறிய பறவைகள் பறக்கத் தொடங்கின. உள்ளிருக்கும் சக்தியை உசுப்பினால் தயக்கமின்றி பறக்கலாம் எல்லோரும்!!
**************************************************************
தன் குருவிடம் ஒருவர் கேட்டார்,”என்னை பலரும் அவமானப்படுத்துகிறார்கள். நான் என்ன செய்வது?’ குரு சொன்னார், “அவற்றைப் பொருட் படுத்தாதீர்கள்”. “என்னால் முடியவில்லையே”! “அப்படியானால் அவற்றைக் கடந்து செல்லுங்கள்”. “அதுவும் முடியவில்லையே!” “சரி! அப்படி யென்றால் அவற்றைக் கண்டு சிரித்து விடுங்கள். “குருவே! அதுவும் முடியவில்லை!” குரு சொன்னார், “அவமானங்களை உங்களால் நிராகரிக்க முடியவில்லை, கடக்க முடியவில்லை, கண்டு சிரிக்க முடியவில்லை என்றால் அந்த அவமானங்களுக்கு நீங்கள் தகுதியுடையவர் என்று அர்த்தம்.”
**************************************************************
சிறையிலிருந்து தப்பித்த அந்தக் கைதி, ஒரு நதியைக் கடந்தாக வேண்டும். இருட்டில் ஓடிவந்தவன் தட்டுத்தடுமாறி படகொன்றில் ஏறி வேகவேகமாய் துடுப்புப் போடத் தொடங்கினான். திசை தெரியாததாலோ என்னவோ மறுகரை வரவேயில்லை. துடுப்பு பிடித்தபடி தூங்கிப் போனான். காலையில் அவனை எளிதாகக் கைது செய்தனர். காரணம், கரையோரம் கட்டப்பட்டிருந்த படகின் கயிற்றை அவிழ்க்காமலேயே துடுப்பு போட்டுக் கொண்டிருந்தான். பழைய பழக்கங்களில் இருந்து விடுவித்துக் கொள்ளாத போது…. விடுதலை ஏது?
No comments:
Post a Comment